கோவை சின்னத்தம்பி யானையை தேடிச் சுற்றும் தாய், குட்டி யானைகள்! | Female and calf elphants searching Chinnathambi in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (27/01/2019)

கடைசி தொடர்பு:15:55 (27/01/2019)

கோவை சின்னத்தம்பி யானையை தேடிச் சுற்றும் தாய், குட்டி யானைகள்!

கோவையில் இருந்து டாப்ஸ்லிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சின்னத்தம்பியை தேடி, குட்டி மற்றும் தாய் யானைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

சின்னத்தம்பி குடும்பம்

கோவை மக்கள் எப்போதும் மரியாதைக்கும், பாசத்துக்கும் பெயர் பெற்றவர்கள். ஆனால், கடந்த சில மாதங்களாக விநாயகன், சின்னத்தம்பி யானைகளை இடமாற்றம் செய்யக் கூடாது என்று பாசப் போராட்டம் நடத்தி வந்தனர். பல்வேறு போராட்டங்களையும் மீறி, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விநாயகன், சின்னத்தம்பி இரண்டு யானைகளும் பூர்விக பூமியில் இருந்து, புதிய பகுதியில் விடப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, சின்னத்தம்பி யானை நேற்று முன்தினம் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்காக, வனத்துறையினர் சின்னத்தம்பியை பல நாள்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்படி இருந்தும், சின்னத்தம்பியை பிடிப்பது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. அதிகாலை முதலே சின்னத்தம்பியுடன், தாய் மற்றும் குட்டி யானைகள் வலம் வந்து கொண்டிருந்தன. இதனால், முதலில் போடப்பட்ட மயக்கி ஊசி தவறிவிட்டது. தொடர்ந்து இந்த யானைகளைப் பின் தொடர்ந்து, பல மணி நேரம் போராடி, பட்டாசுகளை வீசி, கும்கிகளை வைத்து விரட்டித்தான் சின்னத்தம்பியை, அதன் குட்டி மற்றும் தாயிடம் இருந்து வனத்துறையினர் பிரித்தனர்.

தாய் குட்டி

குடும்பத்தை விட்டுப் பிரித்து, தந்தம் உடைந்து, ரத்தக் காயங்களுடன் சின்னத்தம்பி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, பெரும்பாலான மக்கள் மத்தியில் சோகத்தையும், கோபத்தையும் ஒரே சேர உருவாக்கியிருக்கிறது. இந்நிலையில், சின்னத்தம்பியை பிரிந்திருக்கும், தாய் மற்றும் குட்டி யானைகள், கடந்த இரண்டு நாள்களாக சின்னத்தம்பியை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றன.

இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் கூறுகையில் ,”நாங்கள் சின்னத்தம்பிக்கு மயக்க ஊசி போடுவதற்காக, பின் தொடர்ந்தபோது அந்த இரண்டு யானைகளும் அவனுடன்தான் இருந்தன. குட்டியைப் பிடிக்கத்தான் வருகிறார்களோ என்று எண்ணி, சின்னத்தம்பியும், தாய் யானையும் குட்டியை முன் விட்டு, துதிக்கையில் தட்டிக் கொடுத்து வேக வேகமாக நடந்து சென்றன. நாங்கள் அவற்றை விரட்டியபோது கூட, குட்டி யானை, சின்னத்தம்பியின் கால் பகுதியையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அந்த பெண் யானை ஏற்கெனவே ஆக்ரோஷத்துடன் தான் சுற்றும். தற்போது, சின்னத்தம்பியை பிடித்திருப்பதால், மேலும் ஆக்ரோஷத்துடன் கணுவாய், வரப்பாளையம் பன்னீர்மடை போன்ற பகுதிகளில் இரண்டு யானைகளும்  சின்னத்தம்பியை தேடிக் கொண்டிருக்கின்றன” என்றனர்.

சின்னத்தம்பி குடும்பம்

இயற்கையைச் சுரண்டுபவர்கள் எல்லாம் அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்க, எந்தப் பாவமும் செய்யாத யானைகள் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.