ராஜராஜ சோழனுக்கு ஐம்பொன்னில் சிலை! - அசத்திய கோவை இளைஞர் | This Coimbatore man made statue for RajaRaja Chozha

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (27/01/2019)

கடைசி தொடர்பு:14:21 (28/01/2019)

ராஜராஜ சோழனுக்கு ஐம்பொன்னில் சிலை! - அசத்திய கோவை இளைஞர்

கோவையில் புதிய வீடு கட்டிய ஒருவர் அதில் சோழ மன்னன் ராஜராஜ சோழனுக்கு ஐம்பொன்னில் சிலை வைத்துள்ளார்.

ராஜ ராஜ சோழன் சிலை

கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். தமிழ் வழியில் திருமணம், குடமுழுக்கு போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மன்னர் ராஜராஜ சோழன் மீது அதீத அன்பு கொண்டனர். இதனால், தன்னுடைய மகனுக்கு ராஜராஜ சோழனின் இயற்பெயரான அருள் மொழி வர்மன் என்ற பெயரைத்தான் சூட்டியுள்ளார். இந்நிலையில், தான் புதிதாக கட்டிய வீட்டில் ராஜராஜ சோழனுக்கு இரண்டு அடியில் ஐம்பொன் சிலை அமைத்து பேரன்பு காட்டியிருக்கிறார் சீனிவாசன்.

ராஜ ராஜ சோழன் சிலை

இதுகுறித்து சீனிவாசனிடம் பேசினேன், “திருமுறைகளைக் கண்டெடுத்ததால், ராஜராஜனை திருமுறை சோழன் என்றும் அழைப்பார்கள். மக்களை அதிகம் நேசிப்பதால், ஜனநாதன் என்றும் அவரை அழைப்பார்கள். அந்த அளவுக்கு மக்களும் அவர் மீது அன்பு வைத்திருந்தனர். கண் தெரியாத ஓதுவார்களை வழிகாட்டுவதற்காக, சம்பளம் போட்டு சிலரை பணியமர்த்தினார். அவர்களுக்குக் கண் காட்டுவோன் என்று பெயர் வைத்தார். ராஜராஜனுக்கு சிலை அமைக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. தாராசுரம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிலை செய்யப்பட்டது. மிகவும் அழகாக வந்துள்ளது. புதுமனைப் புகுவிழா, ராஜராஜ சோழன் சிலைக்குக் குடமுழுக்கு இரண்டையும் இன்று நடத்தியுள்ளேன்.

எங்களது வழிபாட்டு அறையில் அவரது சிலையை வைத்துள்ளோம். ஐப்பசி சதய திருநாளில் அடியார்களை அழைத்துவந்து, ராஜராஜ சோழன் சிலைக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து, அன்றைய தினம் அன்னதானம் செய்யவும் திட்டமிட்டுள்ளேன்” என்றார்.