நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்ட படகு! - 110 கிலோ கஞ்சாவுடன் இலங்கையைச் சேர்ந்த 3 பேர் கைது | Three people arrested by Sri Lankan Navy over smuggling ganja

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (27/01/2019)

கடைசி தொடர்பு:09:12 (28/01/2019)

நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்ட படகு! - 110 கிலோ கஞ்சாவுடன் இலங்கையைச் சேர்ந்த 3 பேர் கைது

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடற்கரையில் இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 110 கிலோ கஞ்சா இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட மூவரை வல்வெட்டித்துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இலங்கை கடற்படையினரிடம் பிடிபட்ட கஞ்சா.

இந்தியாவிலிருந்து வல்வெட்டித்துறை கடற்பரப்புக்கு  கஞ்சா கடத்தப்படுவதாக இலங்கை கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்திய இலங்கை சர்வதேசக் கடல் எல்லையிலிருந்து இரண்டு கடல் மைல் தூரத்தில் இலங்கைக் கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டு இருந்த இலங்கையைச் சேர்ந்த பைப்பர் படகு மற்றும் தமிழக நாட்டுப் படகை சுற்றிவளைத்தபோது தமிழக படகு இலங்கைக் கடற்படை கப்பலைக் கண்டதும் இந்திய எல்லைக்குள் தப்பிச் சென்றது.

இலங்கை பைப்பர் படகைப் பிடித்து சோதனை செய்தபோது படகில் 110  கிலோ கேரள கஞ்சாவை இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். ஆனால், படகில் இருந்த இலங்கை நபர்கள் கடலில் குதித்துத் தப்பினர். இதையடுத்து கடற்படையினர் வல்வெட்டித்துறை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர், கஞ்சா கடத்த முயன்ற 3 பேரையும் கடற்படையினரும் போலீஸாரும் சேர்ந்து மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதையடுத்து வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வைத்து 100 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளதுடன் இந்தக் கஞ்சாவைக் கடத்தி வந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நபர் ஒருவரையும் கஞ்சாவைக் விலைக்கு வாங்க வந்திருந்த கொழும்புவைச் சேர்ந்த இருவரையும் கைது செய்துள்ளனர். நடுக்கடலில் தப்பிச் சென்ற இந்திய கடத்தல்காரர்கள் குறித்து இந்திய கடற்படை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் தகவல் கொடுத்துள்ளனர்.