21 நாடுகள்… 5,000 கலைஞர்கள்… இணையத்தில் சங்கமித்த மாமல்லபுரம் சிற்பிகள்! | global stone workshop programme in mamallapuram

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (28/01/2019)

கடைசி தொடர்பு:07:43 (28/01/2019)

21 நாடுகள்… 5,000 கலைஞர்கள்… இணையத்தில் சங்கமித்த மாமல்லபுரம் சிற்பிகள்!

உலக அளவில் 21 நாடுகளைச் சேர்ந்த 5,000 கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணையதளம் மூலம் சங்கமிக்கும் நிகழ்வு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த சிற்பிகள் அங்கே குழுமி இருந்தார்கள்.

மாமல்லபுரம் சிற்பிகள்

மாமல்லபுரம் தலைமைச் சிற்பி பாஸ்கரனின் ‘படைப்புச் சிற்பிகள்’ சிற்பக்கூடத்தில் வருடந்தோறும் வெளிநாட்டு சிற்பிகள் முகாமிட்டு சிற்பங்கள் செய்து சொந்த நாட்டுக்கு எடுத்துச் செல்வார்கள். அக்டோபர் மாதத்தில் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த முகாமில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சிற்பிகள் கலந்துகொள்கிறார்கள். ஓவியர் ட்ராஸ்கி மருது, சிற்பக் கலைக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், தலைமைச் சிற்பி பாஸ்கரன் உள்ளிட்டவர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். 21 நாடுகளில் உள்ள சிற்பிகள், ஓவியர்கள், மியூசியம் உள்ளிட்ட துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்காகவும் உலகம் முழுவதும் உள்ள கலைஞர்களை ஒன்றிணைக்கும் செயலாகவும் இந்த நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள்.

நிகழ்ச்சி தொடங்கப்பட்டதும் கருங்கல்லில் எல்லோரும் உளியைக் கொண்டு செதுக்கி மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள். அதே புத்துணர்வோடு சிற்பக் கூடங்களில் உள்ள அவர்களின் படைப்புகளில் ஆர்வம் செலுத்துகிறார்கள். தங்களுடைய அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து உற்சாகம் அடைகிறார்கள். நிகழ்ச்சியை வீடியோவாக இணையத்தில் பதிவேற்றம் செய்த உடன் மற்ற நாடுகளில் இருக்கும் கலைஞர்கள் அதைக் காண்கிறார்கள். அதுபோல் மற்ற நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளின் வீடியோக்களும் இணையத்தில் பார்க்க முடிகிறது.

மாமல்லபுரம் வெளிநாட்டு சிற்பிகள்

குளோபல் கற்சிற்ப கூடம்  நிறுவனர் ஸ்பெஃபனோ பெக்காரி, “சிலைகளின் வடிவமைப்பு, அழகு, பாரம்பர்யம் ஆகியவை மதத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது. சிலைகளைத் தெய்வங்களாக மக்கள் பார்க்கிறார்கள். கூட்டம் கூட்டமாகக் கோயில்களில் கூடுகிறார்கள். இந்தக் கலாசாராம் எங்களைக் கவர்ந்திருக்கிறது. ஆனால், எங்கள் நாட்டில் சிலைகளுக்கும் மதத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சிற்பம் என்பது ஒரு கலை மட்டுமே. அங்கே உள்ள சர்ச்சுகள் மிகப் பிரமாண்டமாக இருக்கும். ஆனால், அங்கே யாரும் வரமாட்டார்கள். பெரும்பாலும் மியூசியத்துக்குதான் செல்வோம்.

மாமல்லபுரம் படைப்புச் சிற்பிகள்

எங்கள் நாட்டில் உள்ள மார்பல்களைவிட இங்கே உள்ள கற்கள் மிகவும் வலிமையாக இருக்கிறது. சிற்பங்களும் உறுதித்தன்மையுடன் இருக்கிறது. தொழில்நுட்பமும் சிற்பிகளின் ஒத்துழைப்பும் நமக்குக் கிடைப்பதால் இங்கே ஒன்பதாவது ஆண்டாக நிகழ்ச்சியைத் தொடர்கிறோம். இதே நேரத்தில் உலக அளவில் 5,000 கலைஞர்கள் ஒன்றுகூடி தங்கள் அனுபவங்களையும் இந்த ஆண்டு திட்டத்தையும் சக கலைஞர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்தியாவில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் பூஜைகள் செய்து நிகழ்ச்சியைத் தொடங்குகிறார்கள்” என்றார்.

மாமல்லபுரம் சிற்பிகள்

‘படைப்புச் சிற்பிகள்’ சிற்பக்கூட உரிமையாளர் பாஸ்கரன் “சிற்பக்கலையைப் பொறுத்தவரை உலக அளவில் வருடத்துக்கு எட்டு கூட்டுப் பயிற்சி முகாம்கள் நடைபெறுகின்றன. இத்தாலி, ஸ்வீடன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் என மாறிமாறி நடைபெறும். இந்தியாவில் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. ஒன்பதாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். ஐரோப்பிய கலைஞர்கள் மற்றும் இந்தியக் கலைஞர்களின் கலைப் பரிமாற்றமாக இந்த நிகழ்வு இருக்கிறது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க