`வெற்று வாக்குறுதிகள் கொடுக்கும் அரசியல்வாதிகளே உஷார்!’ - எச்சரிக்கும் நிதின் கட்கரி | Promise what you can fulfil, warns Nitin Gadkari

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (28/01/2019)

கடைசி தொடர்பு:08:00 (28/01/2019)

`வெற்று வாக்குறுதிகள் கொடுக்கும் அரசியல்வாதிகளே உஷார்!’ - எச்சரிக்கும் நிதின் கட்கரி

உங்களால் நிறைவேற்ற முடிகிற வாக்குறுதிகளை மட்டுமே கொடுங்கள் என்று அரசியல்வாதிகளை மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எச்சரித்திருக்கிறார். 

நிதின் கட்கரி

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கட்கரியின் இந்தப் பேச்சு டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கட்கரி, ``பெரிய அளவிலான வாக்குறுதிகளை அள்ளிவீசும் அரசியல்வாதிகளை மக்கள் விரும்புவார்கள். அதேநேரம், தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை அந்த அரசியல்வாதிகள் நிறைவேற்றத் தவறும்பட்சத்தில் அதே மக்கள் அவர்களைப் புறந்தள்ளிவிடுவார்கள். எனவே, உங்களால் நிறைவேற்ற முடிகிற வாக்குறுதிகளை மட்டுமே மக்களுக்குக் கொடுங்கள்’’ என்று பேசினார். 

கட்கரி

நிதின் கட்கரியின் இந்தப் பேச்சு அரங்கத்தில் பலத்த கைத்தட்டல்களைப் பெற்றுத்தந்தது. மக்களின் கரகோஷத்துக்கிடையே பேச்சைத் தொடர்ந்த கட்கரி, ``நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிப்பவன் நான் இல்லை’’ என்றார். மேலும் அவர் பேசுகையில், ``நான் கொடுத்த வாக்குறுதிகள் குறித்து எந்தப் பத்திரிகையாளரும் என்னிடத்தில் கேள்வி எழுப்ப முடியாது. ஏனெனில், கொடுத்த வாக்குறுதிகளை 100 சதவிகிதம் நிறைவேற்ற முடியும் என்று திடமாக நம்புபவன் நான்’’ என்றும் அவர் குறிப்பிட்டார். பா.ஜ.க-வின் முன்னாள் தேசியத் தலைவரான நிதின் கட்கரி, கடந்த 1995-99 ஆண்டு மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க - சிவசேனா கூட்டணி ஆட்சி இருந்தபோது, தான் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்தது குறித்தும் பேசினார்.