"எங்கள் சுயநலத்துக்காகப் போராடவில்லை... இளைஞர்களுக்காகத்தான்!" - ஜாக்டோ - ஜியோ ஆசிரியர்கள் | "We are protesting for the youngsters!" explains JACTO-GEO

வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (28/01/2019)

கடைசி தொடர்பு:14:24 (28/01/2019)

"எங்கள் சுயநலத்துக்காகப் போராடவில்லை... இளைஞர்களுக்காகத்தான்!" - ஜாக்டோ - ஜியோ ஆசிரியர்கள்

"இதுவரை அரசு ஊழியர்களிடமிருந்து ரூ.19,000 கோடி பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாருக்கும் அந்தப் பணம் வழங்கப்படவில்லை. இதில், பலர் இறந்துவிட்டனர். பிடித்தம் செய்யப்பட்ட தொகை என்ன ஆனது? எனவே, ஓய்வுக்குப் பின் வாழ்க்கையை நடத்த ஓய்வூதியம் கேட்கிறோம்."

``நாங்கள் ஊதிய உயர்வுக்காகப் போராடவில்லை. இளைய தலைமுறையினரின் வேலைவாய்ப்புக்கும் சேர்த்துதான் போராட்டம் நடத்துகிறோம்’’ என ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும்; 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ (அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கம்) சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் நடத்துபவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்கும் வேலையில் அரசு இறங்கியுள்ளது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம், ``அதிக சம்பளம் வாங்கும் இவர்களுக்கு இது போதாதா, இவர்களைப் பணியிலிருந்து நீக்கி வேலையில்லாத இளைஞர்களுக்குப் பணி வழங்க வேண்டும்’’ என்பன போன்ற பல்வேறு கருத்துகள் அரசு ஊழியர்களுக்கு எதிராகப் பரவி வருகின்றன.

ஜாக்டோ

அதேவேளையில், தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு முயன்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டதுடன், இன்று அவர்கள் பணிக்கு வரவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களைப் பணி செய்யவிடாமல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தடுத்தால், போலீஸார் கைதுசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ``இளைஞர்களின் எதிர்காலத்துக்காகத்தான் போராட்டம் நடத்துகிறோம்’’ என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலர் தே.முருகன், ``அரசுக்காகப் பணியாற்றிய ஊழியர்கள் ஓய்வுபெற்ற பின் எங்கே செல்வார்கள்? அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுத்து, காக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அதற்கு மாறாக 2003-ல் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை அரசு ஊழியர்களிடமிருந்து ரூ.19,000 கோடி பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாருக்கும் அந்தப் பணம் வழங்கப்படவில்லை. இதில், பலர் இறந்துவிட்டனர். பிடித்தம் செய்யப்பட்ட தொகை என்ன ஆனது? எனவே, ஓய்வுக்குப் பின் வாழ்க்கையை நடத்த ஓய்வூதியம் கேட்கிறோம். 1988 முதல் 2006-ம் ஆண்டுவரை மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்ததைத்தான் 10 ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். நாங்கள் புதிதாக எதையும் கேட்கவில்லை.

முருகன்

அரசாணை எண் 56-ல் புதிய வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். ஆரம்பப் பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளோடு இணைப்பதால் ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் நீக்கப்படும்; பணியிடம் குறைக்கப்படும். இதனால் புதிய வேலைவாய்ப்புகள் பறிபோகும். அங்கன்வாடி மையங்களில் பணிபுரிவதற்காக மாண்டிசோரி வழியில் படித்தவர்கள் லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். ஆனால், உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர். இதனால் அங்கன்வாடியில் சொல்லித் தருவதற்காகவே மாண்டிசோரி வழியில் படித்தவர்களுக்கு வேலை இருக்காது.

அரசுப் பள்ளிகள் இல்லையென்றால், தனியார் பள்ளிகள் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்பதுபோலச் செயல்படுவார்கள். எனவே, அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும். 3,500 அரசு ஆரம்பப் பள்ளிகளை மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளோடு இணைக்கக் கூடாது என்பதுதான் எங்கள் போராட்டத்தின் முக்கிய கோரிக்கை. எங்கள் சுயநலத்துக்காக நாங்கள் போராடவில்லை. இளைஞர்களின் எதிர்காலத்துக்காகவும் சேர்த்துதான் நாங்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

ஜாக்டோ

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் விருதுநகர் மாவட்டச் செயலர் வைரமுத்து, ``அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்காக மட்டும் போராடுவதாகத் தவறான கருத்துகள் பரவி வருகின்றன. படித்து முடித்து வீட்டில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை கிடைக்க அரசு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இதனால் எங்கள்மீது அவர்கள் கோபம் திரும்பியுள்ளது. பெற்றோர் - ஆசிரியர் கழகத்துக்குப் பல ஆண்டுகளாக நிதியே வழங்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது, இப்போது எங்களுக்குப் பதிலாகத்  தற்காலிகமாகப் பணியில் சேர்க்கப்படும் ஆசிரியர்களுக்கு எப்படிச் சம்பளம்  கொடுப்பார்கள்? தொடக்கப் பள்ளிகளை மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் முடிவை எதிர்க்கிறோம். அங்கன்வாடி மையங்களை மூடும் முடிவை எதிர்க்கிறோம்.

அரசாணை எண் 56 என்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துவிடும். இதற்கான முன்னோட்டம்தான் அரசாணை எண் 100 மற்றும் 101. இதைப் பயன்படுத்தி தொடக்கக் கல்வித் துறையைப் பள்ளிக் கல்வித் துறையோடு இணைத்துவிட்டனர். இதனால் பணியிடங்கள் குறைக்கப்பட்டு, புதிய பணியிடங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டே இந்த அரசாணையை எதிர்க்கிறோம். ஆனால், எங்களின் கோரிக்கைகள் இன்னும் மக்களை முழுமையாகப் போய்ச் சேரவில்லை’’ என்றார்.


டிரெண்டிங் @ விகடன்