`மீண்டும் மொபைல் நெல் கொள்முதல்’ - விவசாயிகள் வலியுறுத்தல்! | Purchase of mobile paddy should be brought back

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (28/01/2019)

கடைசி தொடர்பு:11:40 (28/01/2019)

`மீண்டும் மொபைல் நெல் கொள்முதல்’ - விவசாயிகள் வலியுறுத்தல்!

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் நெல்லை, அரசு நேரடி கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுசென்று விற்பனை செய்வதில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார்கள். இதைத் தவிரிக்க தமிழக அரசு, மொபைல் முறையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நெல்

 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பட்டத்தில் பல லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல் தற்போது அறுவடைக்கு வந்துள்ளன. நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லைக் கொண்டு சென்று விற்பனை செய்வதில் பல இடர்ப்பாடுகள் நிலவுகின்றன. இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சாவூர் மாவட்டக் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``விவாயிகளுக்கு ஏற்கெனவே லாபகரமான விலை கிடைக்கவில்லை. விலைவாசி உயர்வு, வேலையாட்கள் பற்றாக்குறையால் உற்பத்திச் செலவு அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் நெல்லை விற்பனை செய்கிறதுக்கும் அதிகமாகச் செலவு செய்ய வேண்டியுள்ளது.

கொள்முதல் நிலையத்துக்குத் தங்களோட நெற்பயிர்களைக் கொண்டு செல்ல குறைந்தபட்சம் 6,000 ரூபாய்க்கு மேல செலவாகுது. சிறு, குறு விவசாயிகளைக் கொள்முதல் நிலைய ஊழியர்கள் மதிக்கிறது இல்லை. நெல்லை, தரையில போட்டு வச்சி பல நாள்கள் விவசாயிகள் அங்கயே காத்திருக்க வேண்டியதாயிருக்கு. வியாபாரிகள் எடுத்துக்கிட்டு வரக்கூடிய நெல்லுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து, உடனே கொள்முதல் செஞ்சிக்குறாங்க. 

விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளைத் தவிர்க்க, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த நடமாடும் கொள்முதல் முறையைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாயிகளின் வயலுக்கு வந்து கொள்முதல் செய்யும் முறை 2008-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்காலத்துல கொண்டு வரப்பட்டது. ஜெயலலிதா முதலமைச்சராக வந்த பிறகும் அது தொடர்ந்துச்சு. ஆனா, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்த பிறகு, அது ஏனோ நிறுத்தப்பட்டது. மீண்டும் அதைக் கொண்டு வர வேண்டும்” என்றார்.