``இளைஞர்கள்னா இப்படிதான் இருக்கணும்!" - முறைகேட்டைத் தட்டிக்கேட்ட இளைஞர்களைப் பாராட்டிய ஜோதிமணி | Congress jothimani congartulates kadavoor youths!

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (28/01/2019)

கடைசி தொடர்பு:13:20 (28/01/2019)

``இளைஞர்கள்னா இப்படிதான் இருக்கணும்!" - முறைகேட்டைத் தட்டிக்கேட்ட இளைஞர்களைப் பாராட்டிய ஜோதிமணி


    கடவூர் ஊராட்சி

கடவூரில் முறைப்படி அறிவிக்காமல் 100 நாள் வேலை பார்க்கும் பெண்களை மிரட்டி அவசரம் அவசரமாக கிராமசபை கூட்டம் நடத்தியதாக புகார் சொன்ன கடவூர் இளைஞர்கள் பற்றி விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டோம். அதை படித்துவிட்டு, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி, `இளைஞர்கள்ன்னா இப்படிதான் இருக்கணும். உங்க ஊரு பிரச்னையை உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு போறேன்' என்று பாராட்ட, அந்த இளைஞர்கள் நெகிழ்ந்துபோயிருக்கிறார்கள்.

 கிராமசபைக் கூட்டம் பற்றி பெண்களுக்கு விளக்கும் இளைஞர்

கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் ஊராட்சியில்தான் மேற்படி பரபரப்பு. தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஊராட்சியான கடவூர் ஊராட்சியில், 11000 வாக்களர்களும்,15000 க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். `இந்த ஊராட்சியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை' என்று மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ``எல்லோரையும் அழைத்து முறைப்படி கிராமசபைக் கூட்டம் நடத்தினால், பிரச்னையாகும் என்று பயந்து ஊராட்சி கிளர்க் பழனிவேலு,100 நாள் வேலை பார்க்கும் பெண்களை மிரட்டி அவசரம் அவசரமாக கிராம சபை கூட்டத்தை நடத்திவிட்டார்" என்று எள்ளும் கொள்ளுமாக வெடித்தார்கள் அந்தப் பகுதி இளைஞர்கள்.

நம்மிடம் பேசிய அந்தப் பகுதி இளைஞர்கள், ``எங்க ஊராட்சியின் கிராமசபைக் கூட்டத்தை எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல்,100 நாள் வேலை பார்க்கும் அப்பாவி மக்களை வைத்து நடத்திவிட்டார் பழனிவேலு. கடவூர் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய பஞ்சாயத்து ஆகும். ஆனா, இங்க அடிப்படை வசதிகளே இல்லாமல் பல ஆண்டுளாக அல்லாடி வருகிறோம். `எங்கள் பகுதிக்கு வளர்ச்சித் திட்டங்கள் என்ன நடந்துள்ளன' என்பதை பற்றியும், `இதுவரை கிராமசபையில் முறையான கணக்கு வழக்குகளை ஒப்படைக்காதது' பற்றியும் இந்த வருட கிராமசபைக் கூட்டத்தில் நாங்கள் கேள்வி கேட்கலாம்ன்னு இருந்தோம். ஆனா,100 நாள் வேலை திட்டத்தில் பெண்களை ஒருங்கிணைக்கும் தற்காலிக ஊழியரான ராஜேஸ்வரி உள்ளிட்ட மூன்று பெண்கள் மூலமாக 100 நாள் வேலை செய்யும் பெண்களை, ஆண்களை மிரட்டி இப்படி கால் மணி நேரத்துக்குள் கிராமசபைக் கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டார் பழனிவேலு. கிராமசபை பற்றி எங்கள் ஊராட்சி செயல் அலுவலரை தொடர்பு கொண்டோம். எந்த பதிலும் இல்லை. பி.டி.ஓவை தொடர்புகொண்டோம். பேச மறுத்துவிட்டார். 


 ராஜேஸ்வரி

 

பின்னர் அம்மா அழைப்பு மையத்தை 1100 என்ற எண்ணில் அழைத்து புகார் கூறினோம். நடவடிக்கை இல்லை. தொடர்ந்து இதுபோன்று நடைப்பெற்றுக்கொண்டே இருக்கிறது. காரணம் கேட்டால் கிளர்க், `நீங்க பஞ்சாயத்துக்கு எப்படியா இருந்தாலும் வந்துதான் ஆகணும். பார்த்து நடந்துக்குங்க. முடிஞ்சதை பாத்துக்குங்க'ன்னு தெனாவெட்டாகப் பேசினார். உடனே, கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களை கேட்டதுக்கு, `நீங்க கிராமசபை கூட்டத்துல கலந்துகிட்டு, நாங்க சொல்ற இடத்துல கையெழுத்து போடலன்னா, உங்களுக்கு நாளையிலிருந்து வேலை கிடைக்காது'ன்னு மிரட்டி கலந்துக்க சொன்னதா சொன்னாங்க. அவங்ககிட்ட, கிராமசபையின் முக்கியத்துவத்தைப் பத்தி விளக்கினோம். உடனே, அதை ராஜேஸ்வரி தடுத்து எங்களை மிரட்டினாங்க. இந்த விவகாரத்தை நாங்க சும்மா விடபோவதில்லை. இந்த ஊராட்சியில் பல லட்சம் முறைகேடு நடந்திருக்கு. அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி அவசரம் அவசரமாக கிளர்க் கிராமசபை கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்" என்று குமுறி இருந்தார்கள். இந்த விசயத்தை நேற்று, `100 நாள் வேலை பெண்களை மிரட்டி கிராமசபைக் கூட்டம்?' - கரூர் இளைஞர்கள் கொந்தளிப்பு!'  என்ற தலைப்பில் செய்தி பதிந்திருந்தோம். இந்தச் செய்தி கடவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 ஜோதிமணி

இந்த நிலையில், நமது விகடன் இணையதளச் செய்தியைப் படித்த, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி, அந்த இளைஞர்களை போனில் அழைத்து பாராட்டி இருக்கிறார். அதுபற்றி, நம்மிடம் பேசிய அந்தப் பகுதி இளைஞரான பாலா,
 ``விகடன் கட்டுரையைப் படிச்சுட்டு, என்னிடம் பேசினாங்க. கடவூர் ஊராட்சியில் நடக்கும் பிரச்னைகளை ஆர்வமாக் கேட்டுக்கிட்டாங்க. `இளைஞர்கள்னா இப்படிதான் இருக்கணும். நான் இந்த விசயத்தை உடனே கடவூர் மாவட்ட திட்ட அலுவலர் கவிதா மேடத்தின் கவனத்திற்கு கொண்டு போய், பிரச்னையைத் தீர்க்க முயற்சி செய்கிறேன்.

பாலா

கடவூர் ஊராட்சியில் நடைபெற்றிருப்பதாக நீங்க சொல்ற முறைகேட்டையும் விசாரிக்கச் சொல்கிறேன். அப்படியும் நடவடிக்கை இல்லைன்னா, என் தலைமையில் போராட்டத்தில் குதிப்போம்'னு சொல்லி இருக்காங்க. இந்த ஒன்றியத்தில் உள்ள எந்தக் கட்சியும் இந்தத் தவறைத் தட்டிக் கேட்கலை. தட்டிக் கேட்ட எங்களையும் ஊக்கப்படுத்தலை. ஆனா,ஜோதிமணி அக்கா எங்களை தட்டிக் கொடுத்து, உற்சாகப்படுத்தியது நெகிழ்ச்சியா இருக்கு" என்றார் மகிழ்ச்சியாக!.