`சின்னத்தம்பியைக் கோவைக்கே இடமாற்றம் செய்யுங்க..!’ - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் #BringBackChinnathambi | BringBackChinnathambi hashtag goes trend in social media

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (28/01/2019)

கடைசி தொடர்பு:12:35 (28/01/2019)

`சின்னத்தம்பியைக் கோவைக்கே இடமாற்றம் செய்யுங்க..!’ - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் #BringBackChinnathambi

சின்னத்தம்பி யானையை, மீண்டும் கோவைக்கே இடமாற்றம் செய்ய வேண்டுமென்று சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குகள் பகிரப்பட்டு வருகின்றன.

சின்னத்தம்பி

கோவையில் சின்னத்தம்பி என்றழைக்கப்படும் காட்டு யானையால், பயிர் சேதம் ஏற்படுவதாகக் கூறி, அதை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை சின்னத்தம்பி யானையை, மயக்க ஊசி போட்டு, வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்தனர். அப்போது, சின்னத்தம்பி யானைக்கு உடலில் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன. மேலும், தந்தமும் உடைந்தது.

குறிப்பாக, பெண் மற்றும் குட்டி யானைகளிடமிருந்து, வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டுதான், சின்னத்தம்பி இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்குப் பொது மக்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட சின்னத்தம்பி மற்றும் விநாயகன் யானைகளுக்கு ஆதரவாகச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவுகள் போடப்பட்டு வருகின்றன.

சின்னத்தம்பி

அந்த இரண்டு யானைகளுக்கும் இந்தத் தடாகம் பகுதிதான் பூர்வீகம். எனவே, விநாயகன் மற்றும் சின்னத்தம்பி யானைகளை மீண்டும் இங்கேயே கொண்டுவந்து விடவேண்டும். முக்கியமாக, சின்னத்தம்பி யானையை அதன் குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டும். என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், சின்னத்தம்பி யானையை மீண்டும் கோவைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, #BringBackChinnathambi என்ற ஹேஷ்டேக்குகள், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.