விடுமுறையைப் பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள் - திருச்சி வங்கியில் 500 சவரன் நகை கொள்ளை | Trichy Punjab National Bank robbery

வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (28/01/2019)

கடைசி தொடர்பு:13:52 (28/01/2019)

விடுமுறையைப் பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள் - திருச்சி வங்கியில் 500 சவரன் நகை கொள்ளை

திருச்சியில் உள்ள ஒரு வங்கியின் லாக்கரை உடைத்து மர்ம நபர்கள் பல கோடி ரூபாய் கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  

வங்கிக் கொள்ளை

 திருச்சி, சமயபுரம் பிச்சாண்டார்கோயில் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி இயங்கிவருகிறது. அப்பகுதியின் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பெரும்பாலானோர் இங்குதான் வங்கிக் கணக்கு மற்றும் நகை அடகு வைத்துள்ளனர். மேலும் பலர் தங்களது நகைகளை லாக்கரில் வைத்துள்ளனர். இப்படி இருக்க இரண்டு நாள்கள் விடுமுறை அடுத்து இன்று காலை பணியாளர்கள் வங்கியைத் திறந்து பார்த்தபோது வங்கியின் மேற்கூரையில் ட்ரில்லிங் மெஷின் மூலம் பெரிய ஓட்டை இருந்ததுடன்,  ஐந்து லாக்கர்கள் உடைந்து, திறந்து கிடந்துள்ளன. அந்த லாக்கர்களில் இருந்த 500 சவரன் நகை மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் ஆகியவை மாயமாகி இருப்பதை கண்டு பதறிய வங்கி ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

  

 தகவலையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கி விரைந்து வந்த போலீஸார் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள். போலீஸாரின் விசாரணையில் கொள்ளை நடந்த இடத்தில் கேஸ் வெல்டிங் எந்திரம், சுத்தி உள்ளிட்டவற்றைக் கைப்பற்றப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் இரண்டு நாள்கள் தொடர் விடுமுறையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்து வங்கியின் பின்புறம் வழியாக சுவரை துளையிட்டு உள்ளே இறங்கி கைவரிசையைக் காட்டியது தெரியவந்துள்ளது.

மெயின் லாக்கர், கொள்ளையர்களிடமிருந்து தப்பித்துள்ளது. அதை எடுத்திருந்தால் பல்லாயிரக்கணக்கான ரூபாய் கொள்ளை போயிருக்கும் என்றும், கொள்ளையர்கள் திருடிய லாக்கர்கள் தனிநபர்களின் லாக்கர்கள் என்பதால் கொஞ்சம் நிம்மதியடைந்துள்ளனர். இந்த லாக்கர்களில் சுமார் 5 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் அங்கு குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தொடர்ந்து போலீஸார் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். ஒரு வங்கியில் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் திருச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.