‘விரும்பும் ஊருக்கு இடமாற்றம்’ - போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர திடீர் ஆஃபர் #Jactogeo | TN Government announced news statement on Jacto geo protest

வெளியிடப்பட்ட நேரம்: 14:07 (28/01/2019)

கடைசி தொடர்பு:14:07 (28/01/2019)

‘விரும்பும் ஊருக்கு இடமாற்றம்’ - போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர திடீர் ஆஃபர் #Jactogeo

ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயர் நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போராட்டம்

ஆசிரியர்களின் இந்தத் தொடர் போராட்டத்தின் காரணமாகக் கடந்த ஒரு வாரமாகப் பல இடங்களில் பள்ளிகள் செயல்படாமல் இருந்து வருகிறது. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். ஆசிரியர்களின் போராட்டத்தை நிறுத்த அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

போராட்டம்

அனைத்து ஆசிரியர்களும் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்தும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. கைது, துறைரீதியான நடவடிக்கை, பணியிடை நீக்கம் போன்ற பல எச்சரிக்கைகளை விடுத்தது தமிழக அரசு, இதைச் சற்றும் கண்டுகொள்ளாத ஆசிரியர்கள், தொடர்ந்து இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர் பணிக்குத் திரும்பாததால் அவர்களின் இடங்களைக் காலி இடங்களாக அறிவித்து அதில் தற்காலிக ஆசிரியர்களை நிரப்ப வேண்டும் எனத் தமிழக கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக விண்ணப்பங்கள் வாங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

போராட்டம்

இந்நிலையில், ஆசிரியர்களின் போராட்டத்தை நிறுத்த தற்போது புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும். உடனே பணிக்குத் திரும்பும் ஆசிரியர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்துக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும்” என்ற சலுகையை அறிவித்துள்ளது.