``அவரும் நானும் சின்ன வயசுலேருந்து நண்பர்கள்’’ - திருமணச் செய்தி பற்றி மதுரை நந்தினி | `I'm getting married’, says madurai nandhini

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (28/01/2019)

கடைசி தொடர்பு:14:25 (28/01/2019)

``அவரும் நானும் சின்ன வயசுலேருந்து நண்பர்கள்’’ - திருமணச் செய்தி பற்றி மதுரை நந்தினி

``தோழர், அப்பாவோடு சேர்ந்து அடுத்த பயணத்துக்குக் கிளம்பிட்டேன். இந்த முறை தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டை கண்டித்து போராட்டம் பண்ணப் போறேன்... தோழர், இந்த முறை `குடி வீட்டுக்குக் கேடு; மோடி நாட்டுக்குக் கேடு’ன்னு சொல்லி பிரசாரம் பண்ணப்போறேன்... இதோ, மது ஒழிப்பைத் தீவிரப்படுத்தி திரும்பவும் பிரசாரத்தைத் தொடங்கிட்டேன் தோழர்...” கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து மக்களுக்கு எதிரான அரசின் செயல்பாடுகளை எதிர்த்துப் பொதுத்தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மதுரையைச் சேர்ந்த மது ஒழிப்புப் போராளி நந்தினியிடமிருந்து இப்படியாகத்தான் நமக்குத் தகவல்கள் வந்துகொண்டே இருக்கும். ஆனால், தற்போது அவரிடமிருந்துதான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக வந்திருக்கும் தகவல் நமக்கு மட்டுமல்ல, தொடர்ச்சியாக மக்களுக்கான களத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. 

மதுரை நந்தினி தன் வருங்கால கணவரோடு

“ஆமாங்க தோழர், உண்மையிலேயே நான் திருமணம் செய்துக்கப்போறேன். அவர் பேரு குண ஜோதிபாசு. சென்னைல மென்பொருள் பொறியாளரா ஒர்க் பண்றாரு. என்னோட நண்பர்தான். மூணு வயசுல இருந்தே எனக்கு அவரை நல்லாத் தெரியும். சின்ன வயசுல இருந்தே நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். என்னைப் பற்றிய எல்லா விஷயமும் அவருக்குத் தெரியும். எனக்குச் சமுதாயத்து மேல இருக்கிற அதே உணர்வுதான் அவருக்கும் இருக்கு. நான் போராட்டங்கள், பிரசாரங்கள்னு பொதுத்தளத்தில் இயங்குறதுக்கான சூழல் அப்பாவோட சப்போர்ட் இருந்ததால ஈஸியா அமைஞ்சிடுச்சு. ஆனா, அவருக்கு அப்படி இல்ல. இப்போதான் பொதுத்தளத்தில் ஈடுபாட்டோடு களமிறங்குகிறதுக்கான சூழல் அவருக்கு அமைஞ்சிருக்கு. ஆனாலும், இதுவரை நேரடியா போராட்டங்கள்ல ஈடுபடலைன்னாலும் மறைமுகமா எனக்கு உதவி பண்ணிட்டுதான் இருந்தார்” என்கிறார் புன்னகையோடு. அவரிடம் திருமணம் எப்போது என்றதும், 

இப்போதைக்கு ரெண்டு பேரும் திருமணம் செய்ய இருக்கிற தகவலை மட்டும்தான் எல்லோர்கிட்டயும் பகிர்ந்திருக்கோம். இதுக்கு அப்புறம் ரெண்டு வீட்டாரும் சேர்ந்துதான் திருமணத்தை முடிவு பண்ணுவாங்க. எப்படியும் இன்னும் ஆறு மாதத்துக்குள்ள திருமணம் வெச்சிடுவாங்க. அதுமட்டுமில்ல, திருமணம்ங்கிறது இனி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழப்போறோம்னு சமுதாயத்துக்குச் சொல்றதுதானே. அதனால, சடங்கு, சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாம ரொம்ப சிம்பிளா வெச்சிக்கலாம்னு நினைச்சிருக்கோம்” என்றவர், 

நந்தினி தன் அப்பாவோடு போராட்டத்தில்

“நான் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரா செயல்படுறதால என் அம்மா என்னை நினைச்சு எப்படிப் பயப்படுறாங்களோ அதேபோலத்தான் ஜோதிபாசு வீட்டில் உள்ளவங்களுக்கும் பயம் இருக்கும். அந்த பயத்தை அவங்ககிட்ட இருந்து நான் விலக்கணும். தொடர்ந்து திருமணத்துக்கு அப்புறமும் இதே வேகத்தோடு மக்களுக்கான களத்தில் இயங்கணும். இதுவரை என் அப்பா எனக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருந்தார். இனி ஜோதிபாசு எனக்குக் கணவராகவும் அப்பாவாகவும் இருந்து என்னோட போராட்ட வாழ்வுக்குத் துணை நிற்பார்” என்கிறார் நந்தினி. 

ஒவ்வொருவரின் வாழ்வும் போராட்டம் நிறைந்ததுவே. உன்னோடு துணையாக, உனக்கே ஒளியாக, உன்னுடைய சுக துக்கங்களில் சரி நிகராகப் பங்கிட்டுக்கொள்ள நான் இருக்கிறேன் என கரம் ஒன்று நம்மைப் பற்றும்போது நம் வாழ்வு வசந்தமாகிறது. நந்தினியின் வாழ்வும் இனி வசந்தத்தை நோக்கி நகரட்டும். 

ஆயிரம் பூச்செண்டு வாழ்த்துகள் நந்தினி.