``பல ஆண்டுகளாகச் சுடுகாடு இல்லை!" - திருவள்ளூர் மாவட்டத்தில் தவிக்கும் 2 கிராமங்கள் | These Tiruvallur villages doesn't have a graveyard

வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (28/01/2019)

கடைசி தொடர்பு:18:34 (28/01/2019)

``பல ஆண்டுகளாகச் சுடுகாடு இல்லை!" - திருவள்ளூர் மாவட்டத்தில் தவிக்கும் 2 கிராமங்கள்

"இந்தக் கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. அதிலிருந்து, இந்தக் கிராமத்துக்குச் சுடுகாடும் இல்லை.... சுடுகாட்டுக்குச் செல்வதற்கான பாதையும் இல்லை. இதனால் இங்கு, இறந்துபோனவர்களின் உடல்களை வயல்வழியாகக் கொண்டுசென்று ஆரணி ஆற்றங்கரை ஓரத்தில் புதைக்கிறோம்."

``பல ஆண்டுகளாகச் சுடுகாடு இல்லை!

"மனிதன் இறந்தபிறகு அவனை அடக்கமோ, தகனமோ செய்யக்கூடிய ஓர் இடம் சுடுகாடு ஆகும். அப்படியான சுடுகாடு, பல ஆண்டுகளாக எங்கள் கிராமங்களில் இல்லை. அவ்வளவு ஏன், அதற்கான பாதையும்கூட இங்கில்லை" என்கின்றனர், திருவள்ளூர் மாவட்ட மக்கள்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ளது வட தில்லை மற்றும் உப்பரபளையம் கிராமங்கள். இந்த இரு கிராமங்களிலும், அவை தோன்றிய காலத்திலிருந்தே, அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளாகவே சுடுகாடும் இல்லை... சுடுகாடு செல்ல பாதையும் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அக்கிராமங்களுக்குச் சென்று விசாரணையில் இறங்கினோம்...

நாம் சென்ற சமயத்தில்கூட, அந்தக் கிராம (வட தில்லை) மக்கள் இறந்தபோன ஒரு பிணத்தை, வயல்வழியாகவே கொண்டுசென்று ஆரணி ஆற்றங்கரை ஓரத்தில் புதைத்ததைப் பார்த்தோம். இதுகுறித்து அக்கிராம மக்களிடம் பேசினோம்...

திருவள்ளூர் மாவட்ட மக்கள் கொடுத்த மனு

``இங்கு, பாப ஹரேஸ்வர் என்ற சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. அதிலிருந்து, இந்தக் கிராமத்துக்குச் சுடுகாடும் இல்லை.... சுடுகாட்டுக்குச் செல்வதற்கான பாதையும் இல்லை. இதனால் இங்கு, இறந்துபோனவர்களின் உடல்களை வயல்வழியாகக் கொண்டுசென்று ஆரணி ஆற்றங்கரை ஓரத்தில் புதைக்கிறோம். அதேநேரத்தில், இங்கு 43 ஏக்கர் பரப்பளவில் (கிராமநத்தம், தோப்பு, கால்வாய், மேய்க்கால், தாங்கள், உள்வாய், ஓடை உள்ளிட்ட இடங்களில்) அரசு புறம்போக்கு நிலம் இருக்கிறது. அந்த இடங்களை, வட தில்லை கிராமத்துக்கு அருகிலுள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சில வசதி படைத்தவர்கள்தான் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சுந்தரவள்ளியிடம் பலமுறை புகார் அளித்திருந்தோம். ஆனால் அந்தப் புகார்மீது அவர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிறகு, அவர் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்குப் புதிதாக மகேஸ்வரி வந்தார். அவரிடமும் பலமுறை மனு கொடுத்தோம். குறிப்பாக, இந்த கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தில்லை குமார் என்பவர் தொடர்ந்து மனு கொடுத்துள்ளார். ஆனால், அவை எதற்கும் எந்தப் பதிலுமில்லை" என்றனர், சோகத்துடன்.

தில்லை குமார்

இதுதொடர்பாக வழக்கறிஞர் தில்லை குமார், ``எங்கள் கிராமத்தில் (வட தில்லை) பத்து தலைமுறைக்கு மேலாகச் சுடுகாடும் இல்லை. சுடுகாடு செல்வதற்கான பாதையும் இல்லை. இதுகுறித்து நான், நேரடியாகவே மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்திருக்கிறேன். ஆனால், அந்தப் புகார்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனுமீது நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது" என்றவர், ``எங்கள் கிராமம் மட்டுமல்ல... அருகில் இருக்கும் உப்பரபாளையம் கிராமத்தின் நிலைமையும் இப்படித்தான்'' என்றார், சற்றே வேதனையுடன். 

அவர் சொன்னபடி, உப்பரபாளையம் கிராமத்துக்குச் சென்று அங்குள்ள பொதுமக்களைச் சந்தித்தோம். அவர்கள், ``எங்கள் கிராமத்து மக்களைப்போலவே வட தில்லை கிராமத்து மக்களின் நிலையும் இருக்கிறது. எங்களுக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்து இந்த இரண்டு ஊர்களுக்கும் சுடுகாடும் இல்லை; சுடுகாட்டுப் பாதையும் இல்லை. எப்போதுதான் இந்த நிலைமை தீருமோ!" என்றனர்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியிடம் பலமுறை பேச முயன்றோம். ஆனால், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. 

உணவு, உடை, உறைவிடம் ஆகியன மனிதனுக்கு அவசியமானதைப் போன்று, சுடுகாடும் அவசியமானதாகும். இதைப் புரிந்து அந்தக் கிராமங்களுக்குச் சுடுகாடு கட்டித்தர நடவடிக்கை எடுக்குமா, அரசு?


டிரெண்டிங் @ விகடன்