மீண்டும் கிளம்பிய தீண்டாமை வேலி சர்ச்சை - அலகுமலையில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் | Protest against untouchability related issue near tiruppur

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (28/01/2019)

கடைசி தொடர்பு:17:30 (28/01/2019)

மீண்டும் கிளம்பிய தீண்டாமை வேலி சர்ச்சை - அலகுமலையில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள்

திருப்பூர் அருகே அலகுமலை கிராமத்தில் அகற்றப்பட்ட தீண்டாமை வேலியில் மீண்டும் நுழைவு வாயில் அமைப்பதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்திருக்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் அலகுமலை கிராமத்தில் சுமார் 200- க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோயில் பாதையானது அந்தப் பட்டியலின மக்கள் குடிநீர் எடுத்துச் செல்லவும், குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லவுமான ஒரு முக்கியப் பாதையாக இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்தப் பாதையை கோயில் நிர்வாகத்தார் கம்பிவேலி அமைத்து மூடினர்.

அதை அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு சமூக நல அமைப்புகளும் தீண்டாமை வேலி எனக் கூறி கடுமையாக எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். இதனால் அந்தக் கம்பிவேலியின் ஒரு பகுதி மட்டும் அகற்றப்பட்டு அப்பகுதி மக்களுக்கு மீண்டும் பாதையாக திறந்துவிடப்பட்டது. ஆனாலும் அமைக்கப்பட்ட கம்பிவேலியை முற்றிலுமாக அகற்றிட வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர்.இதற்கிடையே சர்ச்சைக்குள்ளான அப்பகுதியில் ஆய்வு நடத்திய தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையம், அந்த இடத்தில் கேட் அமைத்துக்கொள்ள கோயில் நிர்வாகத்துக்கு ஒப்புதல் அளித்தது.

தீண்டாமை வேலி

இதையடுத்து இன்றைய தினம் அங்கு கேட் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களுடன் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கேட் அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட குழியை மூடுவதற்கு அவர்கள் முயற்சி செய்ததால், காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும்  இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நீடித்தது. அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 - க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் கேட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.