`அமைச்சர் ஊராட்சியில் பாம்புகள் நெளியுது!’ - கிராமசபைக் கூட்டத்தைக் கலங்கடித்த மக்கள் நீதி மய்ய நிர்வாகி | MNM member raises question in Grama sabha meeting over cleaning works in Minister MR Vijayabhaskar's panchayat

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (28/01/2019)

கடைசி தொடர்பு:17:48 (28/01/2019)

`அமைச்சர் ஊராட்சியில் பாம்புகள் நெளியுது!’ - கிராமசபைக் கூட்டத்தைக் கலங்கடித்த மக்கள் நீதி மய்ய நிர்வாகி

ஆண்டாங்கோயில் கிழக்கு கிராமசபைக் கூட்டம்

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், `அமைச்சர் வசிக்கும் பகுதியிலேயே பாம்புகள் நெளியுது; பூச்சிப் பொட்டுக்கள் அலையுது. நடமாட பயமா இருக்கு' என்று மக்கள் நீதி மய்ய நிர்வாகி ஒருவர் கொடுத்த மனுவால் பரபப்பு ஏற்பட்டது. 

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், கோவை சாலையில் இருக்கிறது ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சி. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த ஊராட்சியைச் சேர்ந்தவர்தான். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் நமச்சிவாய ம். இவர் ஆண்டாங்கோயில் கிழக்கு சரஸ்வதி நகர், நான்காவது கிராஸில் வசித்து வருகிறார். அமைச்சர் வசிப்பதும் அதே சரஸ்வதி நகரில்தான். நடிகர் கமல்ஹாசன் நடத்திவரும் மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த நிர்வாகி நமச்சிவாயம். குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த உராட்சியில் கிளர்க் சசிக்குமார் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது,கையில் மனுவோடு வந்தார் நமச்சிவாயம். அவர் கிராமசபைக் கூட்டத்தை நடத்தும் தலைவரிடம், அந்த மனுவைக் கொடுத்தார்.

நமச்சிவாயம்(சிகப்புச் சட்டை)

``நான் வசிக்கும் சரஸ்வதி நகர் நான்காவது கிராஸில் பாம்புகள் நடமாட்டம் ஜாஸ்தியா இருக்கு. பூச்சி, பாம்புகளின் வரத்தும் இருக்கு. இதனால், மக்களால் நிம்மதியாக நடமாடவில்லை. இரவு நேரங்களில் சாலையில் நடந்து போகவே பயமா இருக்கு. கடந்த பத்து நாள்கள்ல மட்டும் 8 பாம்புகளை மக்கள் பார்த்திருக்காங்க. குழந்தைகளும், சிறுவர்களும் தெருக்களில் விளையாடும்போது, அவங்களுக்கு ஏதாச்சும் ஆயிருமோன்னு பயமா இருக்கு.

பலமுறை புகார் கொடுத்தும் காலி இடங்களில் மண்டிக் கிடக்கும் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதே சரஸ்வதி நகரில்தான் அமைச்சர் வசிக்கிறார். அவர் ஊராட்சியிலேயே இப்படி இருந்தா, மக்கள் என்னதான் செய்ய முடியும்?" என்று கேட்க, தலைவரால் பதில் சொல்ல முடியவில்லை.`மனுவை கொடுங்க. உடனே, நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றபடி மனுவைக் கேட்டார்.

ஆனால், அதோடு விடாத நமச்சிவாயம், தங்கள் பகுதியில் இருக்கும் இன்னும் பல பிரச்னைகளைப் பற்றியும் விவரித்து, அவற்றையும் சரி செய்ய வலியுறுத்திய பிறகே, அமைதியானார். அதன்பிறகே, `அப்பாடா..' எனப் பெருமூச்சிவிட்டார் கிராமசபைக் கூட்டத் தலைவர்.
 இதுபற்றி, ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சி நிர்வாகம் தரப்பில் பேசினோம்.

``சரஸ்வதி நகரில் பாம்புகள் புழங்கும் சம்பவம் இப்போதான் எங்க கவனத்திற்கு வந்தது. உடனடியாகப் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துகள் வசிக்கக் காரணமான புதர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். அமைச்சருக்கும் இந்த விசயம் தெரியாது. தெரிந்திருந்தால், எங்களை நடவடிக்கை எடுக்க வைத்திருப்பார்" என்றார்கள்.