மறியல் செய்த ஆசிரியர் - அரசு ஊழியர்களைக் கைது செய்ய வாகனங்கள் கொடுத்து உதவிய தனியார் பள்ளிகள்! | Private schools provide buses to police for transporting arrested teachers and government employees

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (28/01/2019)

கடைசி தொடர்பு:18:15 (28/01/2019)

மறியல் செய்த ஆசிரியர் - அரசு ஊழியர்களைக் கைது செய்ய வாகனங்கள் கொடுத்து உதவிய தனியார் பள்ளிகள்!

 போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களைக் கைது செய்து கூட்டிச் செல்ல தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளி வாகனங்களை அனுப்பி வைத்த சம்பவம் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராமநாதபுரத்தில் மறியல் போராட்டம் நடத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர்

தமிழக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தங்களது 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் காலையில் மாலையில் விடுவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் போராட்டத்தைக் கைவிடக் கோரி அரசு விடுத்த கோரிக்கையினை ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் கடந்த 25-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட மாநில மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் ஜாமினில் வெளிவர முடியாத வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றும் தங்களது போராட்டத்தினைத் தொடர்ந்தனர். ராமநாதபுரத்தில் இன்று காலை கூடிய ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் அரசின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு அஞ்சமாட்டோம் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. 
 

இதன் பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களில் ஆண்களையும் பெண்களையும் தனித் தனி வாகனங்களில் ஏற்ற முயன்றனர். கடந்த வெள்ளிக்கிழமை இது போன்று இரு தரப்பினரையும் தனித் தனியாகப் பிரித்து காவலில் வைத்திருந்து பின் ஆண்கள் சிலரை மட்டும் கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர். இதனால் இன்று தங்களை ஒன்றாகவே கைது செய்ய வேண்டும். தனித் தனியாக தங்க வைக்கக் கூடாது எனக் கூறி போலீஸ் வாகனங்களில் ஏற மறுத்தனர். இதனால் போலீஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

ஆசிரியர் மறியல்

ஆசிரியர் - அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்ற போலீஸார் ஆண், பெண் என இரு தரப்பினரையும் ஒரே வேனில் ஏற்றிச் சென்றனர். கடந்த 2 நாள்கள் நடந்த மறியலில் பங்கேற்றவர்களை விட இன்று கூடுதலான எண்ணிக்கையில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால் அவர்களை கைது செய்து அழைத்துச் செல்ல போதிய போலீஸ் வாகனங்கள் இல்லாத நிலை உருவானது. இதையடுத்து ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்குச் சொந்தமான வாகனங்களில் போராட்டத்தில் கைதானவர்களை போலீஸார் ஏற்றிச் சென்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடங்களில் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கம் இதை ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை ஏற்றிச் செல்ல தனியார் கல்வி நிறுவனங்கள் போலீஸாருக்குப் பள்ளி வாகனங்களைக் கொடுத்து உதவிய சம்பவம் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.