'புதிதாக வேலைக்குச் சேரும் ஆசிரியர்களுக்கு ஒரு தகவல்' - போராட்டக் களத்திலிருந்து ஆசிரியை! | new teachers please listen to us voice from jacto jio crowd

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (28/01/2019)

கடைசி தொடர்பு:18:59 (28/01/2019)

'புதிதாக வேலைக்குச் சேரும் ஆசிரியர்களுக்கு ஒரு தகவல்' - போராட்டக் களத்திலிருந்து ஆசிரியை!

ஆசிரியர் 

'பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கடந்த 22-ம் தேதி முதல் நடத்திவருகிறது. இந்தப் போராட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் தமிழக அரசு, அரசு ஊழியர்களைப் பணிக்குத் திரும்பும்படி தொடர்ந்து கூறிவருகிறது. ஆயினும், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர். அவர்களின் போராட்டத்தில் தேர்வுத் துறை, நீதித் துறை ஊழியர்களும் இணைவதாக அறிவித்துள்ளனர். இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டு, திருவண்ணாமலையில் கைதாகியுள்ள ஆசிரியை மகாலட்சுமியிடம் பேசினோம்.

ஆசிரியை மகாலட்சுமி "எங்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அதனால்தான், அரசு முதலில் சட்ட விதிகளைக் கூறி பயமுறுத்தியது. இப்போது, பணிக்குத் திரும்பும் ஆசிரியர்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்துக்குப் பணி மாறுதல் என ஆசைகாட்டுகிறது. ஆனால், நாங்கள் எதற்கும் மயங்கப்போவதில்லை. மேலும், டெஸ்மா சட்டம் பாயும் என்ற தகவல்களும் வந்தபடியே இருக்கின்றன. 17  B சட்ட விதியைப் பயன்படுத்தினாலும், அது எதற்காக எங்கள் மீது பாய்ந்தது எனக் கோரிப் போராடுவோம். இன்னொரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். பொதுமக்களிடையே எங்களின் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்று தொடர்ந்து சொல்லியேவருகிறார்கள். இது உண்மையான நிலை இல்லை. ஒரு சிலர் இருக்கலாம். அவர்களும் எங்கள் கோரிக்கைகளை முழுமையாகப் படித்தாலே, எங்களை ஆதரிக்கத் தொடங்கிவிடுவார்கள். 

நாங்கள் போராட்டத்திற்காக, மலையிலிருந்து கீழே இறங்குகையில், ஒரு வண்டியில் சிலர் மேலேறிக்கொண்டிருந்தனர். நாங்கள் நினைத்தபடியே அவர்கள், புதிதாக வேலைக்குச் சேரும் ஆசிரியர்கள். அவர்களுக்கு ஒரு தகவல். அரசு அறிவிப்பில், வேலையை விட்டு எப்போது போகச் சொன்னாலும் சென்றுவிட வேண்டும், சம்பளமும் நிதி ஒதுக்கீடும் அனுமதிக்கப்பட்ட பின்னரே அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் ஏதும் சிக்கல் என்றால், அதற்கும் நாங்கள்தான் போராட வேண்டும். இதற்கெல்லாம் சேர்த்துதான் நாங்கள் போராடிவருகிறோம் என்பதை மட்டும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்கிறார் ஆசிரியை மகாலட்சுமி.