`இலவச வீடு கட்டித்தராவிட்டால் கருணைக்கொலை செய்யட்டும்!' - தூத்துக்குடியில் திருநங்கைகள் போராட்டம் | Transgenders staged protest in Thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (28/01/2019)

கடைசி தொடர்பு:19:35 (28/01/2019)

`இலவச வீடு கட்டித்தராவிட்டால் கருணைக்கொலை செய்யட்டும்!' - தூத்துக்குடியில் திருநங்கைகள் போராட்டம்

தூத்துக்குடியில், இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தி திருங்கைகள் ஆட்சியர் அலுவலக  நுழைவு வாயிலில் உள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடும்பம், உறவுகள், சமூகத்தினரால்  ஒதுக்கிவைக்கப்பட்டிப்பவர்கள் திருநங்கைகள். இவர்களுக்கு  வாடகைக்குக்கூட வீடு தர மறுக்கப்படுகிறது. இதனால், திருநங்கைகள் குழுவாகச் சேர்ந்து, ஒரே வீட்டில் வாடகைக்கு வசித்துவருகின்றனர். பாலியல் தொழில், பிச்சை எடுத்தல் போன்றவற்றிலிருந்து விலகி, மெள்ள மெள்ள சுயதொழில்களில் ஈடுபட்டு முன்னேறிவருகின்றனர். இந்த நிலையில், வசிப்பதற்கு அரசு வீடு கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கைகள், “ஆண் பெண்ணைப் போல நாங்களும் மனிதர்கள்தான்  என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். திருநங்கைகள், தற்போது பலதுறைகளில் சாதனைபடைத்துவருகின்றனர். ஆனால், எங்களை தற்போதும் ஒதுக்கியே வைத்துப் பார்க்கின்றனர். இதனாலேயே, வாடகைக்கு கூட வீடு கிடைப்பதில்லை. ஒரே வீட்டில் 10 பேர் வரை தங்கிவருகிறோம். தங்குவதில் மிகுந்த சிரமம் உள்ளது.

தமிழக அரசு, திருநங்கைகளுக்கு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும். தமிழகத்தில் முதல்முறையாக நெல்லை மாவட்டத்தில் 29 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தூத்துக்குடிக்கு மட்டும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படாதது ஏன்? இதுகுறித்து ஆட்சியர் அலுவலகத்தில்  பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பும்  வழங்கிட வேண்டும். இல்லாவிட்டால், எங்களைக் கருணைக்கொலை செய்துவிடுங்கள்” என்றனர். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள சாலை முன்பு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க