தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்! - புதுக்கோட்டையில் 80 சதவிகித பள்ளிகள் மூடல் | 80 percent schools closed in Pudukoottai over Jacto Geo protest

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (28/01/2019)

கடைசி தொடர்பு:21:20 (28/01/2019)

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்! - புதுக்கோட்டையில் 80 சதவிகித பள்ளிகள் மூடல்

ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லாமல், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் 80 சதவிகித பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்களின் நலன் கருதி, முன்னாள் மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்திவருகின்றனர்.

ஆசிரியர்கள் போராட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். புதுக்கோட்டை அரசு பொதுவளாகத்தில், இன்று 5,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், எஸ்பி செல்வராஜ் தலைமையிலான 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். சாலை மறியலுக்கு முயன்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.

ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால், மாவட்டத்தில் இன்று 80 சதவிகித பள்ளிகள் மூடப்பட்டன. பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவர்களை வீட்டுக்குத் திருப்பி அனுப்பினர். ஒரு சில மேல்நிலைப் பள்ளிகள் மட்டும் திறந்திருக்கின்றன. அங்கும், ஒன்றிரண்டு ஆசிரியர்களே இருந்தனர். 

வகுப்பெடுக்கும் முன்னாள் மாணவர்கள்

கொத்தமங்கலம், குலமங்கலம் பகுதிகளில், ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதை அறிந்து, பட்டப்படிப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் தாங்கள் படித்த பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்குப் பாடங்களை நடத்தினர். ஆசிரியர்கள் போராட்டத்தால், தங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வகுப்பெடுக்கும் முன்னாள் மாணவர்கள்

இதுகுறித்து முன்னாள் மாணவர் ஒருவரிடம் பேசினோம். ``ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்க மறுக்கிறது. செவிசாய்க்காத அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் போராடுகின்றனர். பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். அரசு பொதுத்தேர்வுகள் நெருங்கும் நிலையில், மாணவர்களுக்குப் பாடம் எடுக்காமல், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மாணவர்களை அமைதியாகப் படிக்கவைக்க முயற்சி செய்தோம். முக்கிய வினாக்கள்குறித்து அவர்களுக்கு விளக்கினோம். மாணவர்களின் சில சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தோம்" என்றார்.