`எங்க ஊருக்கு டாஸ்மாக் கடையே வேணாம்!’ - சிவகாசி கிராம மக்கள் எதிர்ப்பு | Virudhunagar village people opposes new TASMAC shop in their village

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (28/01/2019)

கடைசி தொடர்பு:21:40 (28/01/2019)

`எங்க ஊருக்கு டாஸ்மாக் கடையே வேணாம்!’ - சிவகாசி கிராம மக்கள் எதிர்ப்பு

சிவகாசி அருகே உள்ள கிராம பொதுமக்கள், தங்கள் ஊருக்குள் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மதுக்கடைக்கு எதிர்ப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, மீனம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள திடீர் காலனியில், குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுக்கடை அமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கூறும்போது, ``மக்கள் குடியிருப்புக்குள் பட்டாசுக் கடைக்காக கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், தற்போது அந்தக் கட்டடத்தை மதுக் கடையாக மாற்றுவதற்கான முயற்சி நடந்துவருகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் ஏற்கெனவே புகார் அனுப்பியுள்ளோம். கடைக்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ளோம். ஆனால், கடை அமைக்க முயற்சிப்பவர் அ.தி.மு.க பிரமுகர் என்பதால், அதிகாரிகள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. மதுக்கடை அமைய உள்ள இடத்தைச் சுற்றி வீடுகளும், கோயில், பள்ளிகளும் அமைந்துள்ளன. ஏற்கெனவே, இப்பகுதியில் இருந்த கடையால்தான் இரண்டு கிராமங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

மதுக்கடைக்கு எதிர்ப்பு

 மீண்டும் இங்கே கடை அமைந்தால், சாதிச் சண்டைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மேலும், பள்ளி மாணவர்களும் சிறுவயதிலேயே போதைக்கு அடிமையாகிவிடுவார்கள். எனவே, இப்பகுதியில் கடை அமைக்கக் கூடாது. மீறி இங்கே அமைந்தால், அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுப்போம்’’ என்றார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்திடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, ''குடியிருப்புகளுக்குள் மதுக்கடை அமைக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது. அந்தக் கடையை வேறு இடத்தில் மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்'' என ஆட்சியர் தெரிவித்தார்.