`வெளியில் போராட்டம்; உள்ளே விண்ணப்பம்!’ - சேலம் ஆசிரியர்கள் போராட்ட நிலவரம் | Salem jacto geo protest situation

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (28/01/2019)

கடைசி தொடர்பு:22:00 (28/01/2019)

`வெளியில் போராட்டம்; உள்ளே விண்ணப்பம்!’ - சேலம் ஆசிரியர்கள் போராட்ட நிலவரம்

போராட்டம்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வெளியே வேலை நிறுத்தப் போராட்டம் செய்துகொண்டிருக்கும் நிலையில், சேலம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில்,  படித்த வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு மும்முரமாக விண்ணப்பம் பூர்த்திசெய்து கொடுத்துவருகிறார்கள். இதனால், ஆசிரியர்கள் மத்தியில் கோபமும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.

கணேசமூர்த்தி

இதுபற்றி சேலம் முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, `சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆசிரியர்கள் 3 வகையானவர்களாக இருக்கிறார்கள். 1. பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக போராட்டக் களத்திற்குச் செல்லும் ஆசிரியர்கள். 2. பள்ளிக்குச் சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போடாமல் வகுப்பறையில் குழந்தைகளுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள். 3.போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு குழந்தைகளுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள்.

சேலம் மாவட்டத்தில், சுமார் 14,000 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இதில், முதல் இரண்டு நாள்கள் 80 விழுக்காட்டிற்கு மேல் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதன் பிறகு தற்போது 50 விழுக்காடு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீதி 50 விழுக்காடு ஆசிரியர்கள் பணிபுரிந்துகொண்டிருக்கிறார்கள். தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வாங்கப்பட்டுவருகிறது.

விண்ணப்பம்

சத்யப்பிரியாநேற்று மாலை வரை 2500-க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. தற்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கொடுத்திருக்கிறார்கள். மொத்தம் 3500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்த்து 25 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.  ஆசிரியர் மட்டும் 18 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.சிவக்குமார்

முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வெளியே வரிசையில் நின்று விண்ணப்பம் பூர்த்திசெய்துகொண்டிருந்த சத்தியபிரியா, ''சேலம் அக்ரஹாரத்தில் இருந்து வந்திருக்கிறேன். நான் பி.ஏ., வரலாறு முடித்து விட்டு பி.எட்., 2013ல் முடித்தேன். தற்காலிக ஆசிரியர் பணியிடம் நிரப்புவதற்கு விண்ணப்பிக்கச் சொல்லி செய்தி வந்ததால், இங்கு விண்ணப்பிக்க வந்திருக்கிறேன். ஆசிரியர்களின் போராட்டத்தை எதிர்க்கும் நோக்கமில்லை'' என்றார்.

விண்ணப்பம் பூர்த்திசெய்துகொண்டிருந்த சிவக்குமார், ''நான் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு 2011-ம் ஆண்டு பி.எட்., பயிற்சியும் முடித்தேன். கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்களை இன்னும் ஆசிரியர் பணிக்கு எடுக்கவில்லை. ஒருவேளை போராட்டங்கள் அனைத்தும் முடிந்து, அரசு ஆசிரியர் பணிக்கு ஆள் எடுத்தால், முன்னுரிமை கொடுப்பார்கள் என்ற நோக்கத்தில்தான் வந்திருக்கிறேன். மற்றபடி ஆசிரியர்களுக்குப் போட்டியாக வரவில்லை'' என்றார்.