`அவ்வளவு சம்பளம் போதாதா?’ - ஆசிரியர்களை மிரட்டிய ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்! | OPS supporters threaten protesting teachers in theni

வெளியிடப்பட்ட நேரம்: 21:06 (28/01/2019)

கடைசி தொடர்பு:21:16 (28/01/2019)

`அவ்வளவு சம்பளம் போதாதா?’ - ஆசிரியர்களை மிரட்டிய ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்!

தமிழகம் முழுவதும் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ - ஜியோ போராட்டம் நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் நேரு சிலை அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் நுழைந்து ஆசிரியர்களை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம், மூன்று சாலை சந்திப்பான நேரு சிலை அருகே ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் இணைந்து, சுமார் 500 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைக் கைதுசெய்து வாகனத்தில் ஏற்றும் நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, திடீரென அங்கு வந்த ஓ.பி.எஸ் ஆதரவாளரும், அ.தி.மு.க தேனி நகரச் செயலாளருமான கிருஷ்ணகுமார் மற்றும் சிலர் அங்கிருந்த ஆசிரியர்களைப் பார்த்து, “அவ்வளவு சம்பளம் போதாதா? மாணவர்களுக்குத் தேர்வு வர இருக்கிறது. பள்ளிக்கூடத்திற்குச் செல்லுங்கள். அதிகமாக சம்பளம் வாங்கிக்கொண்டு போராட வருவீர்களா?” என்றார். ”அதைச் சொல்ல நீங்கள் யார்? நாங்கள் எங்கள் உரிமைக்காகப் போராடுகிறோம்.” என அங்கிருந்த ஆசிரியர்கள் சொன்னதும், கோபமடைந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில், வாக்குவாதம் முற்றிய நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், ஆசிரியர்களை மிரட்டினர். இரு தரப்பிற்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகவே, நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட போலீஸார், கிருஷ்ணகுமார் உட்பட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக, கிருஷ்ணகுமார் உட்பட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அனைவர் மீதும் போலீஸில் புகார் தெரிவிப்பது தொடர்பாக ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆலோசனை நடத்திவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம், தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.