‘தமிழகத்தில் கொலைகார ஆட்சி நடக்கிறது!’ -முதல்வரை சாடிய மு.க.ஸ்டாலின் | DMK leader MK Stalin slams Chief Minister Edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 07:42 (29/01/2019)

கடைசி தொடர்பு:11:16 (29/01/2019)

‘தமிழகத்தில் கொலைகார ஆட்சி நடக்கிறது!’ -முதல்வரை சாடிய மு.க.ஸ்டாலின்

‘‘ஜெயலலிதா சாவே மர்மமாக உள்ளது. தமிழகத்தில் கொள்ளைக்கார ஆட்சி மட்டுமல்ல... கொலைகார ஆட்சியும் நடக்கிறது’’ என்று கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் விதமாக, ‘‘மக்களிடம் செல்வோம்... மக்களிடம் சொல்வோம்... மக்களின் மனங்களை வெல்வோம்’’ என்ற முழக்கங்களுடன் தி.மு.க-வில் ‘ஊராட்சி சபைக் கூட்டம்’ நடத்தப்பட்டுவருகிறது. மாவட்டம்தோறும் நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிவதோடு, மத்திய பா.ஜ.க அரசையும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க அரசையும் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் குடியாத்தம் வடக்கு ஒன்றியம் சீவூர் ஊராட்சியில் 28-ம் தேதி மாலை நடைபெற்ற தி.மு.க-வின் ஊராட்சி சபைக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

பெண்களிடம் குறைகளைக் கேட்ட பிறகு ஸ்டாலின் பேசுகையில், ‘‘ஜெயலலிதா இறந்த பிறகு, அ.தி.மு.க-வில் பங்காளிச் சண்டை ஏற்பட்டது. இதில், குடியாத்தம் எம்.எல்.ஏ-வின் பதவி பறிக்கப்பட்டதால், இத்தொகுதி அநாதைத் தொகுதியாக மாறிவிட்டது. அ.தி.மு.க அமைச்சர் ஒருவரின் பதவி நீதிமன்றத் தண்டனையால் பறிக்கப்பட்டதால், அவரின் ஓசூர் தொகுதி உள்பட மொத்தம் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை, பிப்ரவரி அல்லது மார்ச் இறுதிக்குள் அறிவிப்பார்கள். மே மாதம் தேர்தல் நடக்கும். சட்டமன்றத் தேர்தல் வருமா... ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்கிற சூழ்நிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

இப்போது நடக்கிற ஆட்சி, மதில் மேல் பூனையைப் போல, இன்றோ அல்லது நாளையோ என்று இருக்கிறது. இந்த ஆட்சியைக் காப்பாற்றுவது, மத்தியில் இருக்கும் மோடி தலைமையிலான ஆட்சிதான். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல் என்று தொடர்ந்துகொண்டிருக்கிறது. தேர்தல் நெருங்கியுள்ளதால், மோடி இப்போது தமிழகத்திற்கு வந்து, ஒரு நாடகத்தை நடத்திவிட்டுச் சென்றுள்ளார். மோடி, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற 100 நாள்களுக்குள், உலக வங்கியில் உள்ள இந்தியாவின் கறுப்புப் பணத்தை மீட்கிறேன்; அவற்றில் ஒவ்வொரு குடிமகனின் தலைக்கும் ரூ.15 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்கிறேன் என்றார். ரூ.15 லட்சம் வேண்டாம்... ரூ.15 ஆயிரமாவது போட்டிருக்கலாம். கதைவிட்டார் மோடி.

ஜெயலலிதா மறைந்த பிறகு, அ.தி.மு.க மூன்றாக உடைந்தது. ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இணைந்து கூட்டுக் கொள்ளையடிக்கிறார்கள். இதற்கு, மத்தியில் இருக்கும் மோடி தலைமையிலான ஆட்சி உடந்தையாக இருக்கிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 கோடி வரை கொடுத்து, ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள். அம்மா ஆட்சி என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், அந்த அம்மாவின் சாவே மர்மமாக உள்ளது. கொடநாடு கொலைகளில், முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இப்போது நடப்பது கொள்ளைக்கார ஆட்சி மட்டுமல்ல... கொலைகார ஆட்சியும்கூட’’ என்றார்.

ஊராட்சி சபைக் கூட்டம்

இதைத் தொடர்ந்து, குடியாத்தம் அடுத்துள்ள கூட்டுரோடு பகுதியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், எம்.எல்.ஏ-க்கள் ஆர்.காந்தி, ஏ.பி.நந்தகுமார் உள்பட தி.மு.க-வினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.