`மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது வளர்ச்சியல்ல!' - தமீமுன் அன்சாரி ஆவேசம்! | This is not growth thamimun ansari slams central government

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (29/01/2019)

கடைசி தொடர்பு:09:54 (29/01/2019)

`மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது வளர்ச்சியல்ல!' - தமீமுன் அன்சாரி ஆவேசம்!

இரண்டாம் நாளாக நீடிக்கும் திருக்காரவாசல் காத்திருப்புப் போராட்டத்துக்கு  தமீமுன் அன்சாரி ஆதரவு தெரிவித்தார். 

தமீமுன் அன்சாரி

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி. திருவாரூர் மாவட்டம்  திருக்காரவாசல் முதல்,  நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை சுமார் 244 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இந்தப் பகுதியைச் சுற்றிலும்  அதிக அளவில்  விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் நிறைந்துள்ளனர்.

போராட்டம்

இத்திட்டத்தை அனுமதிப்பதன்மூலம் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என்பதோடு மட்டுமில்லாமல், லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகக் கூறி, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்திவருகின்றனர். இதைத் தொடர்ந்து, இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் இரண்டாவது நாளாக, இரவு நேர காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு ஆதரவளித்துப் பேசிய அன்சாரி, ``எங்கள் மண்ணின் வளங்களை நாங்கள்தான் காக்க வேண்டும்.

அன்சாரி

அதன் அழிவைப் பார்த்துக்கொண்டு எங்களால் எவ்வாறு அமைதிகாக்க முடியும்? இது இன்றோடு முடியக்கூடிய பிரச்னையல்ல. இது நம் எதிர்கால சந்ததிகளையே அழித்துவிடும். அவற்றையெல்லாம் அறிந்தும் பொறுமைகாக்க இயலாது. மக்களுடைய போராட்டம் நியாமான ஒன்று. எனவே, அவர்களது கோரிக்கைகளை அரசு செவிசாய்த்து, இந்தத் திட்டத்தை உடனடியாகத் தடைசெய்ய வேண்டும். மக்களின் வாழ்வை மேம்படுத்துவதே வளர்ச்சி. தவிர, அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதல்ல வளர்ச்சி. மத்திய அரசும் இதைக் கருத்தில் கொண்டு, வேதாந்தா நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்களைத் திரும்பப் பெற வேண்டும். நானும் இந்த மண்ணைச் சேர்ந்தவன். எனக்கும் இந்த மண்ணைக் காக்க உரிமையுண்டு'' என்றார்.