தள்ளுபடியில் ஒரு பொருளை வாங்குவது லாபமா?! சேமிப்பு டிப்ஸ்! | Buy products for your need, not for the offers

வெளியிடப்பட்ட நேரம்: 10:48 (29/01/2019)

கடைசி தொடர்பு:10:48 (29/01/2019)

தள்ளுபடியில் ஒரு பொருளை வாங்குவது லாபமா?! சேமிப்பு டிப்ஸ்!

தள்ளுபடியில் ஒரு பொருளை வாங்குவது லாபமா?! சேமிப்பு டிப்ஸ்!

பள்ளிப் பருவத்தின்போது உண்டியலில் சேமிப்பது என்பது சுகமான அனுபவம். தினமும் பெற்றோரிடமிருந்து பெறும் சில்லறையை உண்டியலில் சேமித்துவந்து, பள்ளியில் சுற்றுலா செல்வதற்கோ, விளையாட்டுப் பொருள்கள் வாங்குவதற்கோ பயன்படுத்தும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான். வயது ஏற ஏற இந்த மகிழ்ச்சியைத் தொலைத்துவிடுகிறோம். குறிப்பாக, வேலைக்குச் சேர்ந்ததும் கிடைக்கும் சம்பளப் பணத்தில் ஒரு பகுதியைச் சேமிப்பதைவிட செலவழிப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறோம். ``செலவழிக்கும்போது உடனுக்குடன் சந்தோஷம் கிடைக்கிறது. ஆனால், சேமிக்கும்போது அந்த சந்தோஷம் தள்ளிப்போகிறது. எனவேதான் சேமிப்பதைவிட செலவழிப்பதிலேயே நாம் ஆர்வம்காட்டுகிறோம்'' என்று மனோவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சேமிப்பு

அஞ்சறைப் பெட்டிகளில் அம்மாக்கள் சேமிக்கும் பணம்தான் பல குடும்பங்களில் மாதக் கடைசியில் கைகொடுக்கிறது. அதேபோல என்றோ ஒரு சட்டையில், அலமாரியின் இடுக்கில் ஒளித்து வைத்து மறந்துபோன பணம், மாதக் கடைசியில் தற்செயலாகக் கிடைக்கும்போது, சேமிப்பு என்பது `காலத்தினால் செய்த சிறு உதவி'யின் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருவதை உணரலாம். ஆக, சேமிப்பு என்பது நீண்டகாலப் பாதுகாப்பு நோக்கில் செய்யப்படும் நற்செயலாகும்.

சேமிப்பை முதலீடாக மாற்றுவதன் அவசியம்

மாதச் சம்பளம் வாங்கியதுமே அதைச் செலவழிக்கு முன் பத்து சதவிகிதத் தொகையைச் சேமிப்பாக எடுத்துவைத்துவிடுங்கள். மீதம் இருக்கும் 90 சதவிகிதத் தொகைதான் உங்களுடைய மாதச் சம்பளம் என்பதை மனதில்கொள்ளுங்கள். இதே கணக்கீடு வார/தினசரிச் சம்பளம் பெறுவோருக்கும் பொருந்தும். இந்தப் பத்து சதவிகிதச் சேமிப்பை வங்கிக்கணக்கிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீடாகவோ சேமிப்பது உங்களது திறமையைப் பொறுத்தது.

சேமிப்பை முதலீடாக மாற்றுவதன் முக்கியக் காரணம், பணவீக்கத்தால் ஏற்படும் விலைவாசி உயர்வுக்கேற்ப நம் சேமிக்கும் தொகையின் மதிப்பையும் உயர்த்துவதாகும். இந்தப் பத்து சதவிகிதச் சேமிப்பில் உள்ஒதுக்கீடாக அவசரத் தேவைக்கான தொகை ஒன்றையும் தனியாகச் சேமித்து வர வேண்டும். அதை அவசரத் தேவைக்கு மட்டும் எடுக்கும்விதத்தில்தான் முதலீடு செய்ய வேண்டும். அதற்கென பிரத்யேக முதலீட்டு முறைகள் மியூச்சுவல் ஃபண்டில் இருக்கின்றன. வங்கியிலும் சேமிக்கலாம்.

சேமிப்பு

பட்ஜெட்டும் மொத்தச் சரக்கும்

மாதச் சம்பளதாரர்கள், பட்ஜெட் போட்டுச் செலவழிப்பது முக்கியம். பட்ஜெட் போடும் பழக்கம் வீட்டிலிருந்தே தொடங்குவதுதான். இதுதான் நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லது. தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும், அவசியத் தேவையை மிஸ்பண்ணாமல் இருக்கவும் பட்ஜெட் அவசியம். வீட்டுக்கான பொருள்களை சில்லறை விலையில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவதைவிட மாதம் ஒருமுறை மொத்த விலைக்கு வாங்குவது பெருமளவு பணத்தைச் சேமிக்க உதவும். அப்படி மொத்தமாக வாங்கும்போது, தரமான பொருள்களை வாங்க முடிவதோடு, சில தள்ளுபடிச் சலுகைகளையும் அனுபவிக்க முடியும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களும் ஆயுள்காப்பீடும் மிகவும் அவசியமான ஒன்று. மொத்தக் குடும்பத்துக்குமான காப்பீடு செய்துகொள்ளுங்கள். இதில் மருத்துவக் காப்பீடு மருத்துவச் செலவுகளில் சேமிக்கவும், ஆயுள் காப்பீடு, எதிர்பாராத இழப்பிலிருந்து குடும்பத்தை மீட்டெடுக்கும் முதலீடாகவும் பயன்படுகிறது.

கிரெடிட் கார்டுகளின் பயன்

கிரெடிட்/டெபிட் கார்டுகள் பயன்பாடு, தற்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பொருள்கள் வாங்குவது சில நேரத்தில் விலை குறைவாகக் கிடைக்க வழிவகுக்கும். ஆனால், அந்தப் பணத்தை வட்டியில்லாப் பயன்பாட்டுக் காலத்துக்குள் திருப்பிச் செலுத்துவது, வட்டியைச் சேமிக்க உதவும். செல்போன் உள்ளிட்ட சில பொருள்களை ஆன்லைனில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி குறிப்பிட்ட அளவு விலை தள்ளுபடியில் வாங்கும் வாய்ப்பிருந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், எக்காரணத்தை முன்னிட்டும் தள்ளுபடிக்காக ஒரு பொருளை வாங்காமல், தேவைக்காக மட்டுமே வாங்கப் பழகுங்கள்.

சேமிப்பு

ஓய்வுக்கான சேமிப்பு

பணியில் சேர்ந்ததுமே உங்களுடைய சேமிப்பில் வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது போன்ற கனவுகள் இருப்பதுபோலவே, ஓய்வுக்காலத்துக்குப் பிறகான வாழ்க்கையை இனிமையாக, வருமானம் குறைவில்லாமல் அனுபவிப்பதுகுறித்த கனவும் இருக்க வேண்டும். அதற்காகவே சிறந்த ஓய்வூதியத்துக்கான காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். 

தொழிலாளர் வைப்புநிதித் திட்டம்

பணியிடங்களில் உள்ள சேமிப்புத் திட்டமான தொழிலாளர் வைப்புநிதித் திட்டம் மிகவும் பயனுள்ள ஒன்று. சில அலுவலகங்களில் விருப்பத்தின்பேரில் மட்டுமே தொழிலாளர் வைப்புநிதித் திட்டத்துக்கான பிடித்தம் செய்யப்படும். அப்போதும்கூட எந்தத் தயக்கமுமின்றி இந்த வைப்புநிதித் திட்டத்தைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நம் பணிக்காலத்தில் நமக்கே தெரியாமல் வளரக்கூடிய சேமிப்பு அது.

வீட்டுக்கடன் வட்டி குறைப்பு

வீட்டுக்கடன் வாங்கியிருந்தால், அதன் மாதத் தவணையைத் தவறாமல் கட்டிவர வேண்டும். அப்படி ஒழுங்காகக் கட்டிவரும் சூழலில், வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதத்தைக் குறைக்கும்படி பேரம் பேசலாம். 0.5% வட்டியைக் குறைத்தால்கூட நல்ல சேமிப்பாக அமையும். சிறிய சிறிய பொருள்களை பேரம்பேசி வாங்குவதில் ஆர்வம்காட்டும் நாம், இதுபோன்றவற்றில் பேசிப்பார்த்து வட்டியைக் குறைக்கும் முயற்சியைக் கைவிடக் கூடாது.

சந்தாதாரராகுங்கள்

சில பொருள்களைத் தொடர்ச்சியாக விலைக்கு வாங்குவோம். அதையே சந்தாதாரர்களாக மாறி வாங்கினால் விலை குறைவாகக் கிடைக்கும் நிலை இருக்கும். அப்படியான பொருள்களுக்கு சந்தாதாரர்களாக மாறுவதும் சேமிப்பில் சேரும். பத்திரிகைகள், செல்பேசிக் கட்டணம், டிடிஹெச் கட்டணம் போன்றவற்றில் ஆண்டுச் சந்தா பயனுள்ள சேமிப்பாக இருக்கும். 

நம் செலவுகளை எவ்வளவுக்கெவ்வளவு திட்டமிட்டுச் சிக்கனப்படுத்துகிறோமோ அவை அனைத்துமே சேமிப்புகள்தாம். நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதைவிட எவ்வளவு சேமிக்கிறோம் என்பதில்தான் நம்முடைய பொருளாதார வளர்ச்சியின் சூட்சுமமே இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால், நம்முடைய நிகழ்காலம் மட்டுமன்றி எதிர்காலமும் பாதுகாப்பானதாக இருக்கும்.


டிரெண்டிங் @ விகடன்