காய்கறிச் சந்தையாக மாறியது புதிய பேருந்து நிலையம்! - அரசின் அலட்சியத்தால் சீர்காழியில் தொடரும் அவலம் | Vaitheeshwaran koil bus stand became the vegetable market

வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (29/01/2019)

கடைசி தொடர்பு:11:27 (29/01/2019)

காய்கறிச் சந்தையாக மாறியது புதிய பேருந்து நிலையம்! - அரசின் அலட்சியத்தால் சீர்காழியில் தொடரும் அவலம்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே, வைத்தீஸ்வரன் கோயில் பேருந்து நிலையம் பல நாள்களாகச் செயல்படாமல் இருந்த நிலையில், இன்று காய்கறிச் சந்தையாக மாறியது. பல கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேருந்து நிலையம், பயனின்றி சந்தையாக மாறிய அவலநிலை அரங்கேறியிருக்கிறது. 

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான, தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோயில், வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ளதால், பக்தர்கள் கோயிலுக்கு வந்துசெல்ல ஏதுவாகப் பேருந்து நிலையம் கோடிக்கணக்கான மதிப்பீட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

பேருந்து நிலையம் கட்டி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்தைப் புறந்தள்ளி,  உள்ளே செல்லாமல் சாலையில் நிறுத்தியே பயணிகளை ஏற்றி இறக்கினர். பேருந்து நிலையத்துக்குள் பேருந்து வருமா இல்லை வெளியே சென்றுவிடுமா என்ற கேள்வியோடுதான், ஒவ்வொரு முறையும் பயணிகள் பேருந்து நிலையத்தில் நிற்க வேண்டும்.

 பேருந்துகள், நிலையத்துக்குள் வரும் என்று காத்திருக்கும்போது, அவை நிலையத்துக்குள் வராமல் சாலை வழியே நேராகச் செல்வதால், பயணிகள் திடீரென முக்கிய சாலையின் குறுக்கே சென்று பேருந்தில் ஏற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், அவ்வப்போது விபத்துகள் நடப்பதும் பேருந்து நிலையம் முன்பு சகஜமாகிவிட்டது.

இந்நிலையில், இத்தனை நாள்கள் பயன்படாமல் இருந்த பேருந்து நிலையம், இன்று காய்கறிச் சந்தையாக மாறியிருக்கிறது. வைத்தீஸ்வரன் கோயிலில், வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று காய்கறி வாரச்சந்தை, பேருந்து நிலையத்தின் பின்புறம் இருக்கும் பேரூராட்சிக்குச் சொந்தமான இடத்தில் நடைபெறுவது வழக்கம்.

 சந்தை நடைபெறும் பேரூராட்சி இடத்தில் வாரந்தோறும் காய்கறிச் சந்தை போடுவதற்காகக் கட்டடம் கட்டும் பணி, அரசு சார்பில் டெண்டர் விடப்பட்டு நடைபெற்றுவருகிறது. இதனால், சந்தை போடுவதற்கு இடமின்றி தவித்த வியாபாரிகள், பயன்படாமல் இருந்த பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டு, பேருந்து நிலையம் காய்கறிச் சந்தையாக மாறியது.

பல கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் பயன்படாமல், பயணிகளை இத்தனை நாள் அவதிக்குள்ளாகியதை நினைத்து வருத்தம் அடைவதா இல்லை, இன்று காய்கறிச் சந்தை போடுவதற்காகவாது பேருந்து நிலையம் பயன்படுகிறதே என நினைத்து சந்தோஷப்படுவதா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

அரசு நிதியிலிருந்து பல கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்தப் பேருந்து நிலையம் சரிவர இயங்க, அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து, பயணிகளின் பயணத்துக்கு வழியமைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக மாவட்ட ஆட்சியருக்கு வைக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க