நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது! - தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சிகொடுத்த வடக்கு கரோலினா கவர்னர் | USA declares in January in northern Carolina "Tamil language and culture"!

வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (29/01/2019)

கடைசி தொடர்பு:11:26 (29/01/2019)

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது! - தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சிகொடுத்த வடக்கு கரோலினா கவர்னர்

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில், ஜனவரி மாதத்தை, மாநிலத்தின் தமிழ் மொழி மற்றும் கலாசார மாதமாகப் பிரகடனம் செய்து, அந்த மாநில கவர்னர் ராய் கூப்பர் அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கவர்னர் வெளியிட்ட அறிவிப்பு

 

அமெரிக்காவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான வடக்கு கரோலினாவில், இந்த ஆண்டு முதல் ஜனவரி மாதம் மற்றும் தமிழின் தை மாதம் 'தமிழ் மொழி மற்றும் கலாசார மாதமாக' அந்த மாநில மக்களால் அனுசரிக்கப்படுகிறது. இதற்கான பிரகடனத்தை வெளியிட்ட மாநில கவர்னர் ராய் கூப்பர், “உலகில் இருக்கும் பழைமையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழியாகும். வடக்கு கரோலினா மாநிலத்தில் வசிக்கின்ற தமிழர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் வளர்த்தெடுத்துப் பாதுகாத்துவருகின்றனர். இந்தியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் அமெரிக்காவின் பல மாநிலங்களில் தமிழ் மொழி அதிகம் பேசப்படுகிறது. தமிழ் மொழிதான் தமிழர்களின் அடையாளம். இங்கு வசிக்கும் தமிழர்கள், தமிழ்ப்பள்ளிகள் அமைத்து, வருங்கால தலைமுறைக்கும் தமிழ் மொழியையும்,  பாரம்பர்யத்தையும், கலாசாரத்தையும் கொண்டுசேர்க்கின்றனர். 

வடக்கு கரோலினா கவர்னர் ராய் கூப்பர்

இது, நமது மாநிலத்தின் சமூக, பொருளாதார, கலாசார வரலாற்று வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. மேலும், இயற்கைப் பேரிடர்களின்போது, அரசுடன் இணைந்து பல நற்பணிகளைச் செய்கின்றனர். உழவுத்தொழிலைச் சிறப்பிக்கும் வகையில், தமிழர்கள் மரபு வழியாகத் தை திங்களைத் தமிழர் திருநாளாக 4 நாள்கள் கொண்டாடிவருகிறார்கள்.  வட கரோலினா மாநிலமும், தமிழர்களுடன் இணைந்து இந்த தைப் பொங்கலைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த அமெரிக்க வாழ் தமிழரான சுரேஷிடம் பேசினோம். "கவர்னரின் இந்த அறிவிப்பு, அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் வாழும் தமிழர்களின் நீண்ட நாள் கனவுகளில் ஒன்றாகும். அந்தக் கனவு இன்று நிறைவேறியுள்ளது. தமிழுக்கும், தமிழர்களுக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கும் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வடக்கு கரோலினா தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் கடுமையான முயற்சியால்தான் இது சாத்தியமானது" என்றார்.