95% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டனர்! - பள்ளிக் கல்வித்துறை தகவல் | 95% teachers returned to work, School Education Announcement

வெளியிடப்பட்ட நேரம்: 11:56 (29/01/2019)

கடைசி தொடர்பு:11:56 (29/01/2019)

95% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டனர்! - பள்ளிக் கல்வித்துறை தகவல்

ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயர் நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. 

ஜாக்டோ - ஜியோ

ஆசிரியர்களின் இந்தத் தொடர் போராட்டத்தால், கடந்த ஒரு வாரமாகப் பல இடங்களில் பள்ளிகள் செயல்படாமல் உள்ளன. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். ஆசிரியர்களின் போராட்டத்தை நிறுத்த, அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துவந்தனர்.  கைது, துறைரீதியான நடவடிக்கை, பணியிடை நீக்கம் போன்ற பல எச்சரிக்கைகளை விடுத்தது தமிழக அரசு.  இதைச் சற்றும் கண்டுகொள்ளாத ஆசிரியர்கள், தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர். ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பாததால், அவர்களின் இடங்களைக் காலி இடங்களாக அறிவித்து, அதில் தற்காலிக ஆசிரியர்களை நிரப்ப முடிவுசெய்து, அதற்கான விண்ணப்பங்களும் நேற்று கொடுக்கப்பட்டன. 

ஆசிரியர்கள் போராட்டம்

இதற்கிடையில், ஆசிரியர்கள் போராட்டம் நேற்று உச்சத்தை எட்டியதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் நேற்று மாலை ஒரு இறுதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், நாளை காலைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். உடனடியாக பணிக்குத் திரும்பும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடத்துக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும்’ என்ற சலுகையை அறிவித்துள்ளது.  இதையும் மீறி போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது. முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட 450 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 602 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 

தற்காலிக ஆசிரியர்கள் விண்ணப்பம்

இந்நிலையில், இன்று காலை சென்னை எழுப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்விதுறை முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, “ சென்னையைப் பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாக அனைத்து பள்ளிகளும் சீரான முறையிலேயே நடைபெற்று வந்தன. எந்தப்  பள்ளியும் மூடும் அளவுக்கு செல்லவில்லை. இன்று காலை முதல் சென்னை முழுவதும் 99.9% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டனர். நான்கு பேர் மட்டுமே வரவில்லை. அதேபோல, தமிழகம் முழுவதும் 95% ஆசிரியர்கள் பணிக்கு வந்துவிட்டனர். 

பணிக்கு வராத ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு வரும்போது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் காலி இடம் உள்ளதோ, அங்கு அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள். அந்த ஆசிரியர்களுக்குப் பழைய பள்ளியில் இடம் கிடைக்காது. அனைத்து ஆசிரியர்களும் பணிக்குத் திரும்பியதால், தேர்வில் எந்த மாற்றமும் ஏற்படாது. அறிவித்த தேதியில் பொதுத் தேர்வுகள் நடைபெறும். செய்முறைத் தேர்வுகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.  

கல்வித் தகுதி மற்றும் பள்ளிக்கு மிக அருகில் இருக்க வேண்டும். இவற்றின் அடிப்படையில்தான் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கான பணி ஆணை, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு அனுப்பி, அதன்மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.