பல்லாவரம் மீன் மார்க்கெட்டிற்கு சீல் வைத்த ராணுவத்தினர்! - இரவிலும் தொடர்ந்த பதற்றம் | pallavaram fish market sealed by military officers

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (29/01/2019)

கடைசி தொடர்பு:13:25 (29/01/2019)

பல்லாவரம் மீன் மார்க்கெட்டிற்கு சீல் வைத்த ராணுவத்தினர்! - இரவிலும் தொடர்ந்த பதற்றம்

பல்லாவரம் பகுதியில் உள்ள ராணுவ இடத்தில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட் ஒப்பந்த காலம் முடிந்தும் செயல்பட்டு வந்ததால் ராணுவத்தினர் சீல் வைக்க வந்தனர். இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ராணுவத்தினர் மற்றும் காவலர்கள் குவிக்கப்பட்டு அந்த மீன் மார்க்கெட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.

பல்லாவரம் மீன் மார்க்கெட்

சென்னை, பல்லாவரம் ஆடுதொட்டி மைதானம் அருகே பல்லாவரம்-பரங்கிமலை கண்டோன்மென்ட் கழகத்துக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் பரப்பளவில் ராணுவ நிலம் உள்ளது. இந்த இடத்தில் மீன் மார்க்கெட் நடத்துவதற்காகக் கடந்த 2017-ம் ஆண்டு தனியாருக்குத் தற்காலிகமாக கண்டோன்மென்ட் நிர்வாகம் அனுமதி அளித்தது. இதற்கு வாடகையாக 2,25,000 ரூபாய் கண்டோன்மென்டுக்குக் கொடுக்கப்பட்டது.

பல்லாவரம் மீன் மார்க்கெட் ராணுவம் குவிப்பு

இதற்கு அப்பகுதி பொதுமக்களும் உள்ளூர் மீன் வியாபாரிகளும் அப்போது எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும் `காந்தி மீன் மார்க்கெட்’ என்ற பெயரோடு புதிதாக மீன் மார்க்கெட் 60 கடைகளோடு தொடங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரும்பாலானோர் இந்த மார்க்கெட்டுக்கு வரத் தொடங்கினர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்துடன் மீன் மார்க்கெட் ஒப்பந்த காலம் நிறைவடைந்தது. இருந்த போதிலும் அதை காலி செய்ய மூன்று மாதகாலம் கண்டோன்மென்ட் அனுமதித்தது. ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் விண்ணப்பித்திருந்தார்கள். இதற்கு அனுமதி வழங்கவேண்டிய புனேவில் உள்ள ராணுவ அலுவலகம் நிராகரித்து விட்டது. இதையடுத்து மீன்மார்க்கெட்டை காலி செய்வதற்கான பொது அறிவிப்பை ராணுவ அலுவலகம் வெளியிட்டது. ஆனாலும் மீன் மார்க்கெட் நடத்தி வருபவர்கள் காலி செய்யாததால் நேற்று கண்டோன்மென்ட் முதன்மைச் செயல் அலுவலர் ஹர்ஷா மற்றும் அதிகாரிகள் அந்த மீன் மார்க்கெட்டிற்கு சீல் வைக்க வந்தனர்.

மீன் மார்க்கெட், பல்லாவரம் காவல் துறையினர் பாதுகாப்பு

வழக்கு நிலுவையில் இருப்பதால் மார்க்கெட்டை அப்புறப்படுத்தக் கூடாது என மீனவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இதனால் மீன் வியாபாரிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் அங்குக் குவிக்கப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீன் மார்க்கெட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. இரண்டாவது வாயில் வழியாகப் பொருள்கள் எடுத்துச் செல்ல நேரம் ஒதுக்கி, பொருள்களை எடுத்துச் சென்றதும் இரண்டாவது வாயிலும் சீல் வைக்கப்பட்டது. உள்ளூர் அரசியல் பிரமுகர்களை மீன் மார்க்கெட் வைத்திருப்பவர்கள் கண்டு கொள்ளாததே இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் மீன் மார்க்கெட் வைத்திருப்பவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்லாமல் இருந்திருந்தால் சுமுகப் பேச்சுவார்த்தை நடைபெற்று மீண்டும் மீன் மார்க்கெட் திறக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் அப்பகுதியினர் தெரிவிக்கிறார்கள். மீண்டும் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க பல்லாவரம் காவல்துறையினர் இரவு முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க