``பெண்களை மயக்கிக் கொலைசெய்து வீடியோ எடுப்பார்”! - கணவனை சிக்கவைத்த மனைவி அதிர்ச்சித் தகவல் | Husband arrested with the help of wife in murder case

வெளியிடப்பட்ட நேரம்: 13:27 (29/01/2019)

கடைசி தொடர்பு:12:37 (30/01/2019)

``பெண்களை மயக்கிக் கொலைசெய்து வீடியோ எடுப்பார்”! - கணவனை சிக்கவைத்த மனைவி அதிர்ச்சித் தகவல்

பெண்களை மயக்கிக் கொலைசெய்து வீடியோ எடுக்கும் கணவனை போலீஸில் வசமாகச் சிக்கவைத்திருக்கிறார், மனைவி.

பெண் கொலை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்திருக்கும் பெரும்புகை கிராமத்தைச் சேர்ந்தவர், குட்டியம்மாள். ஆடுகளை மேய்ப்பதற்காகக் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியே சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. அவர் உறவினர்கள், ஊர் முழுவதும் தேடிப்பார்த்தும் குட்டியம்மாளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், காணாமல்போன அன்று, குட்டியம்மாள் அதே ஊரைச் சேர்ந்த உறவினரான தேவேந்திரன் என்பவருடன் சென்றதைப் பார்த்ததாக ஊர்க்காரர்கள் சிலர் தெரிவித்தனர். அதையடுத்து, காணாமல்போன தனது தாய் குட்டியம்மாள் குறித்து விசாரிக்க, தேவேந்திரன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார், அவரது மகன் கார்த்திக்.

அங்கு தேவேந்திரன் இல்லாத நிலையில், அவரது மனைவியிடம் சில தினங்களாகத் தனது தாயைக் காணவில்லை என்று கூறியிருக்கிறார் கார்த்திக். அப்போது, தனது கணவன் பல பெண்களை ஆசை வார்த்தைகள் கூறி வலையில் விழவைத்து, அவர்களுடன் நெருக்கமாக இருந்துவிட்டு, பின்னர் அவர்களை மலைப் பகுதிக்கு அழைத்துச்சென்று கொலை செய்துவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறான். அதுமட்டுமல்லாமல், அப்படிக் கொலை செய்ததை வீடியோவும் எடுத்து வைத்திருக்கிறான் என்று சொன்னதோடு, அதற்கு ஆதாரமாக, இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சுமதி என்ற பெண்ணைத் தனது கணவன் எப்படிக் கொலைசெய்தார் என்ற வீடியோவையும் தனது செல்போனில் காட்டியிருக்கிறார் தேவேந்திரனின் மனைவி.

மலை

அந்த வீடியோவில் கை, கால்கள் கட்டப்பட்டு, கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் குப்புற இறந்துகிடக்க, எதற்காக அந்தப் பெண்ணைக் கொலைசெய்தேன் என்று வீடியோவில் பேசுகிறான் தேவேந்திரன். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக், தனது தாயையும் அவன் இப்படிச் செய்திருக்கலாம் என்று உணர்ந்து, உடனடியாக செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதையடுத்து, செஞ்சி - மேல் மலையனூர் வழியில் உள்ள கூழாங்கல் மலையை அலசியது காவல்துறை. அங்கு, கார்த்திக் பயந்தது போலவே அழுகிய சடலமாகக் கிடந்திருக்கிறார் குட்டியம்மாள். அந்தச் சடலத்தைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய காவல்துறை, தேவேந்திரனை அதிரடியாகக் கைதுசெய்தது.

கொலையாளி

அப்போது, அவன் அளித்த தகவலின் அடிப்படையில், கூழாங்கல் மலைக்கு அருகில் இருந்த மற்றொரு மலையிலிருந்து 2 வருடங்களுக்கு முன்பு கொலைசெய்யப்பட்ட சுமதியின் எலும்புக் கூட்டைக் கைப்பற்றியது போலீஸ். அதையடுத்து தேவேந்திரன், ``எனக்கும் சுமதிக்கும் இருந்த தொடர்பு என் மனைவிக்குத் தெரிந்துவிட்டது. அதனால், கோபித்துக்கொண்டு அவள் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டாள். அதையடுத்து சுமதியிடம் பேசுவதையும், அவரைச் சந்திப்பதையும் நிறுத்திவிட்டேன். ஆனால், என்னை மறக்க முடியவில்லை என்றும் அடிக்கடி என்னைச் சந்திக்க வேண்டும் என்றும் தொடர்ந்து நச்சரித்துக்கொண்டிருந்தார்.

செஞ்சி காவல் நிலையம்

அதனால்தான் அவளை மலைக்கு அழைத்துச்சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். இனி, சுமதி நம் வாழ்க்கையில் வர மாட்டாள். நான் அவளைக் கொலைசெய்துவிட்டேன் என்று என் மனைவியிடம் போனில் கூறினேன். ஆனால், அவள் அதை நம்பவில்லை. அதனால், இறந்துபோன சுமதியின் உடலை செல்போனில் வீடியோ எடுத்து, அந்த மெமரி கார்டை என் மனைவியிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னேன். அதேபோல, எனக்கு அத்தை முறையான குட்டியம்மாளுடன் இருந்த தொடர்பும் என் மனைவிக்குத் தெரிந்துவிட்டது. அதனால்தான் குட்டியம்மாளையும் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச்சென்று கொலை செய்தேன்” என்று போலீஸிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறானாம் தேவேந்திரன்.

``சைக்கோ தேவேந்திரனின் கொலைப்பட்டியல் சுமதி, குட்டியம்மாளைத் தாண்டியும் நீள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்தப் பகுதியில் நீண்ட நாள்களாகக் காணாமல்போன பெண்களின் பட்டியலைத் தாயார்செய்துகொண்டிருக்கிறோம்” என்று அதிர்ச்சி கொடுக்கிறது காவல்துறை வட்டாரம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க