``ஹரிணிக்குத் தங்கச்சி பாப்பா பொறந்திருக்கா சார்” - மகிழ்ச்சியில் நாடோடித் தம்பதி | Harini is happy with her newborn sister, says couple

வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (29/01/2019)

கடைசி தொடர்பு:13:54 (29/01/2019)

``ஹரிணிக்குத் தங்கச்சி பாப்பா பொறந்திருக்கா சார்” - மகிழ்ச்சியில் நாடோடித் தம்பதி

ஹரிணிக்கு தங்கச்சி பிறந்துருக்கா

காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இனத் தம்பதியான வெங்கடேசன், காளியம்மாளின் இரண்டு வயது மகள் ஹரிணி. கடந்த ஆண்டு செப்டம்பர் 15 -ம் தேதி காணாமல்போக காவல்துறையினரும் சமூக ஆர்வலர்களும் குழந்தைகள் நல அமைப்புகளும் ஒன்றிணைந்து ஹரிணியைத் தேடினார்கள். 100 நாள்களுக்குப் பிறகு காவல்துறையினர் திருப்போரூரில் ஹரிணியைக் கண்டுபிடித்துக் கொடுக்க இந்தப் பொங்கலும் தமிழக மக்களுக்கு தித்திப்பாகவே அமைந்திருந்தது. ஆனாலும், ஹரிணியைப் பிரிந்திருந்த 100 நாள்களும் அவளது பெற்றோர் அணைக்கட்டுக் காவல் நிலையத்தின் வாசலிலேயே தங்கி இருந்தார்கள். கர்ப்பவதியான காளியம்மாளும் உடல் நலன் மீது கவனம் செலுத்தாமலேயே இருந்தார். ஹரிணி கண்டுபிடித்துக் கொடுக்கப்பட்ட பிறகே இருவரும் இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள். 

குழந்தை

கடந்த ஒரு வாரமாக வெங்கடேசன் நம்மைத் தொலைபேசியில் அழைத்து ஹரிணி இப்போ எங்ககிட்ட நல்லாப் பழக ஆரம்பிச்சிட்டா. எங்க பாஷையெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டா. அக்கம் பக்கத்து குழந்தைகளோட விளையாட ஆரம்பிச்சிட்டா என்று தகவல் கொடுத்துக் கொண்டே இருந்தார். இடையிடையே காளியம்மாவுக்கு விட்டு விட்டு வலி எடுக்குது. எப்போ வேணா குழந்தை பிறக்கலாம்ங்க என்ற தகவலையும் சொன்னார். ஹரிணி பாப்பாவும் என்கூட விளையாடுகிறதுக்கு எப்போ பாப்பா பிறக்கும்னு கேட்டுட்டே இருக்கா என்பார். 

இன்று மதியம் தொலைபேசியில் தொடர்பு கொண்டவரின் குரலில் வழக்கத்திற்கு மாறாக சந்தோஷம் வெளிப்பட்டது. 

தாய் சேய்

``சார், ஹரிணி பாப்பாவுக்குத் தங்கச்சி பொறந்துருக்கா. காளியம்மாவும் புள்ளையும் ஆரோக்கியமா இருக்காங்க. ஹரிணி மாதிரியே அவ தங்கச்சியும் சுகமாப் பிறந்துருக்கா. செங்கல்பட்டு கவர்மென்ட் ஆஸ்பத்திரியில நேத்து ராத்திரி 1.30 க்கு தான் பிரசவம் ஆச்சு. பாப்பா 1.700 வெயிட் இருக்குறா சார். ஒண்ணுக்கு ரெண்டு செல்வங்க எனக்குக் கிடைச்சிருக்கு. இதுக்கு மேல வாழ்க்கையில வேற என்ன சார் வேணும்” என்று ஆனந்த ஆர்ப்பாட்டத்தோடு தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

காளியம்மாள் வெங்கடேசன் தம்பதிக்குப் பிறந்திருக்கும் பெண் குழந்தை பொன்னான வாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்.