இனி போராட்டத்தில் ஈடுபட மாட்டோம்! -ஆசிரியர்களிடம் கடிதம் கேட்டதா அரசு? | Government did not ask any letter from teachers

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (29/01/2019)

கடைசி தொடர்பு:14:15 (29/01/2019)

இனி போராட்டத்தில் ஈடுபட மாட்டோம்! -ஆசிரியர்களிடம் கடிதம் கேட்டதா அரசு?

புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ- ஜியோ, பல லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்னும் ஒரு மாதத்தில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வாரமாக தமிழகத்தின் அனைத்து ஊடகத்தையும் ஆக்கிரமித்திருந்த ஜாக்டோ- ஜியோ போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, அரசு தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

ஆசிரியர்கள் போராட்டம்

பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில், இதுவரை 500-க்கும் அதிகமான ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, போராடும் ஆசிரியர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தது. அதன் பின்பும் ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து, நேற்று மாலை பள்ளிக் கல்வித் துறை இறுதியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், இன்று காலைக்குள் பள்ளிக்குத் திரும்பும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் கேட்கும் இடத்துக்குப் பணியிட மாற்றம் வழங்கப்படும்’ என அறிவித்தது. இதையடுத்து, இன்று காலை தமிழகம் முழுவதும் 95 சதவிகிதம் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. 

இதற்கிடையில், இன்று பள்ளிக்குச் சென்ற ஆசிரியர்களிடம், 'இனி போராட்டத்தில் ஈடுபடமாட்டோம்’ எனக் கடிதம் வாங்கியதாகவும் இந்த நடவடிக்கை தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.  கடித விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். அவர் கூறியதாவது, “ இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டனர். அவர்களிடம் போராட்டம் தொடர்பாக எதுவும் கேட்கவில்லை.  கடிதம் தரவேண்டும்  என்பதுபோன்ற நிர்பந்தமும் வைக்கப்படவில்லை. கடிதம் தொடர்பான தகவல்கள் உண்மையல்ல” என்று கூறினார்.