துரைமுருகன் பெயரில் போலி கார் பாஸுடன் வலம்! - சிக்கிக்கொண்ட மத்திய அரசு ஊழியர் | 'Car pass in duraimurugan name' -BSNL employee arrested

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (29/01/2019)

கடைசி தொடர்பு:15:35 (29/01/2019)

துரைமுருகன் பெயரில் போலி கார் பாஸுடன் வலம்! - சிக்கிக்கொண்ட மத்திய அரசு ஊழியர்

தி.மு.க பொருளாளர் துரைமுருகன் பெயரில், ‘எம்.எல்.ஏ-வுக்கான போலி கார் பாஸ்’ தயாரித்து, டோல்கேட்டுகளில் பயன்படுத்திவந்த, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துரைமுருகன்

தமிழகத்தில், எம்எல்ஏ-க்கள் அனைவருக்கும், தேசிய நெடுஞ்சாலை டோல்கேட்டுகளில் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்வதற்காக ‘கார் பாஸ்’ வழங்கப்பட்டுள்ளது. இச்சலுகையை, எம்.எல்.ஏ-க்களுக்கு வேண்டப்பட்டவர்கள் பலரும் பயன்படுத்திவருகின்றனர். இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ-வுமான துரைமுருகனின் பெயரில் ‘போலியான வாகன பாஸ்’ தயாரித்து, டோல்கேட்டுகளில் பயன்படுத்துவதாகப் புகார்கள் எழுந்தன. 

இதுபற்றி, காட்பாடி எம்.எல்.ஏ அலுவலக ஊழியர் சுரேஷ்பாபு, விருதம்பட்டு போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா கூடுவாஞ்சேரி கிலாம்பாக்கத்தைச் சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர் ரகு (53) என்பவர், துரைமுருகன் பெயரில் போலி பாஸ் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரகுவை தேடிப்பிடித்த போலீஸார், கைதுசெய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.