`கவனிச்சாங்க, வீடியோ எடுத்தாங்க, தொழிலைத் தொடங்கிட்டாங்க!'- பூரிக்கும் `நாப்கின்' தயாரிப்பு வள்ளி | yes finally i did this for gaja area affected people says vali who is doing napkin business

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (29/01/2019)

கடைசி தொடர்பு:16:35 (29/01/2019)

`கவனிச்சாங்க, வீடியோ எடுத்தாங்க, தொழிலைத் தொடங்கிட்டாங்க!'- பூரிக்கும் `நாப்கின்' தயாரிப்பு வள்ளி

'நாப்கின்' வள்ளி
 

ல்வேறு வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் பிரச்னைகளைக் கடந்து, தொழில்முனைவோராக மூலிகை நாப்கின் தயாரிப்பில் அசத்திவருபவர், திருச்சியைச் சேர்ந்த வள்ளி. புதுக்கோட்டை இலங்கை அகதிகள் முகாமிலுள்ள பெண்களுக்கு நாப்கின் தயாரிப்புக்கான இலவசப் பயிற்சி கொடுத்து, அவர்கள் சுயமாகச் செயல்பட உதவியிருக்கிறார். இதுகுறித்துப் பேசுபவர்....

'நாப்கின்' வள்ளி

``புதுக்கோட்டையிலுள்ள இலங்கை அகதிகள் முகாம்ல வசிக்கும் ஒரு பெண், ஒருமுறை என்னைச் சந்திக்க வந்தாங்க. `உங்களைப் பத்தி பத்திரிகைகளில் படிச்சிருக்கேன். அகதிகள் முகாமில் வசிக்கிற எனக்கும், என் உறவினர்களுக்கும் வாழ்வாதாரம் எதுவுமில்லை. சிரமத்தில் இருக்கிறோம். நாப்கின் தயாரிக்க பயிற்சி கொடுங்க'னு கேட்டாங்க. சரியான சூழல் அமைந்தால் பயிற்சி கொடுக்கிறேன்னு சொன்னேன். இந்நிலையில கஜா புயலால் அவங்க தங்கியிருந்த கூடாரமெல்லாம் முழுக்கவே சேதாரம் ஆகிடுச்சு. உணவு, உடை, இருப்பிடம் எதுவுமில்லாமல், ரொம்பக் கஷ்டத்தில் இருந்தாங்க. இதைக் கேள்விப்பட்டு, உடனே அவங்களுக்குப் பயிற்சி கொடுத்தால் உதவியா இருக்கும்னு நினைச்சேன். 

'நாப்கின்' வள்ளி

அவங்க முகாமுக்கு நானும் என் மகனும் சமீபத்தில் பயிற்சி கொடுக்கப் போனோம். அம்மக்களின் நிலை, மிகவும் கவலையை உண்டாக்கும் வகையில இருந்துச்சு. ஆனா, வாழ்க்கையில எப்படியாவது உழைச்சு மேல வரணும்னு நினைக்கிறாங்க. நான் பயிற்சிக் கொடுத்ததை ஆர்வமா கவனிச்சவங்க, அதை வீடியோவும் எடுத்துகிட்டாங்க. இலவசமாகத்தான் பயிற்சி கொடுத்தேன். உடனடியாக மூலிகை தயாரிப்புக்கான மெட்டீரியல் வாங்கி, தொழிலைத் தொடங்கியிருக்காங்க. எப்படியாச்சும் அம்மக்கள் எதிர்காலத்தில் மேம்பட்ட நிலைக்கு வந்திடுவாங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு. எனக்குத் தெரிஞ்ச தொழில் மத்தவங்களும் உதவணும்; பலரும் தொழில்முனைவோராகணும்னு ஆசைப்படறேன். அதனால, கல்லூரிகள்லயும் மாணவிகளுக்குப் பயிற்சி கொடுக்கிறேன். இப்போ என் பையன் சுரேஷூம், என் தொழில்லதான் கவனம் செலுத்துறான். நிறைய கஷ்டங்களைக் கடந்து வந்து, இப்போ நாங்க மத்தவங்களுக்கு உதவுற அளவுக்கு உயர்ந்ததில் மகிழ்ச்சி" எனப் புன்னகைக்கிறார், வள்ளி