`ஒருநாள் மட்டும் டாஸ்மாக்கை மூடுங்கள்!’ - தமிழக அரசுக்கு உத்தரவு போட்ட நீதிபதிகள் | tasmac store leave

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (29/01/2019)

கடைசி தொடர்பு:20:00 (29/01/2019)

`ஒருநாள் மட்டும் டாஸ்மாக்கை மூடுங்கள்!’ - தமிழக அரசுக்கு உத்தரவு போட்ட நீதிபதிகள்

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி நாளை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரதீஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ``குமரி மாவட்டம், புதுக்கடை என்ற பகுதியில் டாஸ்மாக் கடை பல நாள்களாக இயங்கி வருகிறது. இதன் அருகில் பள்ளி, மருத்துவமனை, கோயில் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்கள் உள்ளன. இதனால் அதிகப்படியான பெண்களும் குழந்தைகளும் வந்து செல்கின்றனர். டாஸ்மாக் கடையால் பலருக்கும் தொந்தரவுகள் ஏற்படுகிறது. எனவே, இதைக் கருத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் பல முறை பிரச்னைகளைக் கொண்டு சென்றோம். ஆனால், மாவட்ட ஆட்சியரோ எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் மெத்தனம் காட்டுகிறார். எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு கொண்ட அமர்வு, இதுதொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து தமிழக மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு உள்துறை செயலரை சேர்த்து, நாளை காந்தி நினைவு நாள் என்பதால் நாளை ஒருநாள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டதோடு, மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையைப் பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.