சேலம் கலெக்டரைக் கலாய்த்த டிக் டாக் வீடியோ! - சைபர் கிரைம் போலீஸார் விசாரணை | Tik tok Video Salem Collector Upset

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (29/01/2019)

கடைசி தொடர்பு:17:40 (29/01/2019)

சேலம் கலெக்டரைக் கலாய்த்த டிக் டாக் வீடியோ! - சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

கலெக்டர்


சமூக வலைதளங்களில் டிக் டாக் மோகம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கிறது. பாட்டுக்குத் தகுந்தாற்போல வாய் அசைப்பதும், நடனத்துக்குத் தகுந்தாற்போல உடலை அசைப்பதும் டிக் டாக் கலாசாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் டிக் டாக்கின் மூலம் சேலம் கலெக்டர் ரோகிணியின் பல புகைப்படங்களுக்குப் பின்பாட்டு போட்டு வீடியோ வெளியிட்டு வாட்ஸ் அப்பில் பரப்பியிருப்பது அரசு தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கலெக்டராக இருப்பவர் ரோகிணி ராம்தாஸ் பாஜிபாகரே. இவருடைய ஒவ்வொரு செயலும் ஊடகத்தைத் தாண்டி  சமூக வலைதளங்களில் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் அதிகளவு பரவி வருகிறது. இதனால் சேலம் மக்கள் மத்தியில் கலெக்டர் ரோகிணிக்கு நல்ல அறிமுகம் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஒரு மர்ம கும்பல் சேலம் கலெக்டர் ரோகிணியின் பல புகைப்படங்களைத் திரட்டி, அதற்குப் பின் பாடலாக நடிகர் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் வரும் ``அடிநெஞ்சு அனலாகவே... தீ அள்ளி ஊத்துற’’ என்ற பாடலை வைத்து டிக் டாக் மூலம் இந்த வீடியோவை உருவாக்கியிருக்கிறார்கள். 21 செகண்ட் ஓடும் இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் பெரும் வைரலாகப் பரவி வருகிறது. மாவட்ட நிர்வாகம் சைபர் க்ரைமுக்குத் தகவல் கொடுத்து இந்த வீடியோவை முடக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இதுபற்றி கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் பேசியபோது, ``யார் வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை. வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி காவல்துறைக்குத் தகவல் கொடுத்திருக்கிறோம்’’ என்றார்.