`அரசே கற்றுக்கொடுக்குது; இது சரியல்ல!' - ஆதங்கப்படும் அரசுப் பள்ளி ஆசிரியை #jactogeo | Government teacher explain about jacto geo protest

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (29/01/2019)

கடைசி தொடர்பு:19:03 (29/01/2019)

`அரசே கற்றுக்கொடுக்குது; இது சரியல்ல!' - ஆதங்கப்படும் அரசுப் பள்ளி ஆசிரியை #jactogeo

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசின் கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னர், இன்று காலை பல ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர். 

அரசு ஆசிரியர் போராட்டம்

இது தொடர்பாக, சென்னையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை அலுவலர் திருவளர்செல்வி செய்தியாளர்களிடம், “தமிழகம் முழுவதிலும் 95% ஆசிரியர்களும் சென்னையில் மட்டும் 99.9% ஆசிரியர்களும் மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டனர். பணிக்கு வராத ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு வரும்போது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் காலி இடம் உள்ளதோ, அங்கு அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள். அந்த ஆசிரியர்களுக்குப் பழைய பள்ளியில் இடம் கிடைக்காது. அனைத்து ஆசிரியர்களும் பணிக்குத் திரும்பியதால், தேர்வில் எந்த மாற்றமும் ஏற்படாது. அறிவித்த தேதியில் பொதுத் தேர்வுகள் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

ஆசிரியர் போராட்டம்

தமிழக அரசு கூறிய விவரங்களை உறுதிப்படுத்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரிடம் பேசினோம். “95 சதவிகிதம் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டதாக அரசு கூறும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நிலை உள்ளது. சில இடங்களில், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அதே நேரத்தில் அவர்கள் பள்ளிக்கும் செல்லவில்லை. சில மாவட்டங்களில் 100 சதவிகிதம் ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படியிருக்க தமிழக அரசு கூறும் விவரங்கள் உண்மையில்லை. 95 சதவிகிதம் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டனர் எனக் கூறினால், பிறருக்குப் பயம் வரும். அனைவரும் பணிக்குச் செல்லும் போதும் நாமும் செல்வோம் என்றுதான் நினைக்கத் தோன்றும். அந்த யுக்தியைப் பயன்படுத்திதான் அரசு இவ்வாறு அறிவித்திருக்க வேண்டும். சில இடங்களில் அரசின் திட்டம் கைகொடுக்கவும் செய்துள்ளது. ஆனால், நீலகிரி போன்ற பகுதிகளில் ஓர் ஆசிரியர்கூட பள்ளிக்குச் செல்லவில்லை. 

ஆசிரியர் போராட்டம்

போராட்டம் நடத்திய பல இடங்களில் அந்தக் குழுவின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைவர் இல்லாத காரணத்தால்தான் இன்று போராட்டம் நடைபெறவில்லை. பணிக்கு வராததால் பெற்றோர்கள் எங்கள் மீது கோபத்தில் உள்ளனர். எங்களுக்கும் குழந்தைகள் மீது அக்கறை உள்ளது. போராட்டம் நடந்த நேரங்களிலும் பல ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்று வருகை பதிவில் கையெழுத்திடாமல் பணி செய்தனர். பிறகு, விடுமுறை நாள்களில் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மாணவர்களைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. டிரான்ஸ்ஃபர் வழங்குவதாக அரசு அறிவித்த பிறகுதான், ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர் எனப் பலரும் கூறிவருகின்றனர். அது உண்மையில்லை. என் சக ஆசிரியர் ஒருவர் ஒரு வாரமாகப் போராட்டக் களத்தில் இருந்தார். எவ்வளவு போராடியும் அரசு நம்மைக் கண்டுகொள்ளவில்லை. அந்த விரக்தியில் நான் பள்ளிக்குச் செல்கிறேன் எனக் கூறினார். பணியிட மாற்றத்துக்காகப் பள்ளிக்குச் சென்றவர்களும் உண்டு. ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்குச் செல்லவில்லை என்பதே உண்மை.

ஆசிரியர் போராட்டம்

இன்று பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்துக்குப் பணி மாற்றம் வழங்கப்படும். வராத ஆசிரியர்களுக்கு, இடமாற்றம் போக மீதமுள்ள பணிகளில் மட்டுமே பணி வழங்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது அரசின் வெளிப்படையான உரிமை மீறல். பொதுவாகப் பணி மூப்பு அடிப்படையில்தான் பணி இடமாற்றம் வழங்கப்படும். ஆனால், தற்போது அரசு, சட்டத்தைத் தவறாக பயன்படுத்தி பணியிட மாற்றம் வழங்குவதாக அறிவித்துள்ளது மிகவும் மோசமான செயல். சட்டத்தைக் காப்பாற்றி பின்பற்ற வேண்டிய அரசே அதை மாற்றி அறிவித்தால் பொதுமக்கள் எப்படிச் சட்டத்தைப் பின்பற்றுவார்கள். ஒரு நெருக்கடி வந்தால் எந்தச் சட்டத்தையும் மீறலாம் என அரசே கற்றுக்கொடுக்கிறது. இது சரியானதல்ல” என ஆதங்கமாகப் பேசினார்.