விருதுநகர் மாவட்டத்தில் 91.8 % ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர் | 91.8 percent teacher return to szhool in virudhunagar

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (29/01/2019)

கடைசி தொடர்பு:19:40 (29/01/2019)

விருதுநகர் மாவட்டத்தில் 91.8 % ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர்

ஆசிரியர்

விருதுநகர் மாவட்டத்தில் ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்ந்துவரும் நிலையில் 91.8 சதவிகிதம் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என மொத்தம் 963 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 10,738 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த ஒருவாரமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பள்ளி ஆசிரியர்களே அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் போராட்டம் தொடர்ந்தது.

ஆசிரியர்

விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் இன்று ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால், போராட்டத்தில் பங்கேற்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. மாவட்டத்தில் உள்ள 882 ஆசிரியர்கள் பணிக்குச் செல்லவில்லை. மீதமுள்ள 9,856 பேர் இன்று பணிக்குத் திரும்பிவிட்டனர்.

ஆசிரியர்

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறும்போது, ``போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் 23 பேர் பள்ளி ஆசிரியர்கள். எனவே, அந்த 23 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 99 பேரும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 84 பேரும் பணிக்கு வந்துள்ளனர். தற்போது தற்காலிகப் பணிக்காக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இதுவரை 6,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அடுத்து 23 பேருக்குப் பதிலாகத் தகுதியான பட்டதாரிகள் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.