சென்னை ஐ.ஐ.டி-யில் தொடரும் தற்கொலைகள்! - ஒரு மாதத்தில் உயிரை மாய்த்த 2 வது மாணவர் | IIT Madras Student Commits Suicide

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (29/01/2019)

கடைசி தொடர்பு:20:20 (29/01/2019)

சென்னை ஐ.ஐ.டி-யில் தொடரும் தற்கொலைகள்! - ஒரு மாதத்தில் உயிரை மாய்த்த 2 வது மாணவர்

ஐ.ஐ.டி என்றால் சிறந்த கல்வி நிறுவனம். அங்கு படிக்க இடம் கிடைப்பது மிகவும் கடினமான விஷயம் என்று முன்பெல்லாம் பிரபலமானது. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் கல்லூரியில் நடக்கும் சர்ச்சைகளால் ஐ.ஐ.டி அடையாளம் காணப்படும் அளவுக்கு மாறிவருகிறது. 

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதால், இரு தரப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தாக்குதலில் சூரஜ் என்ற மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஓர் அறையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. சமீபத்தில் ஐ.ஐ.டி சைவம் மற்றும் அசைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு எனத் தனித் தனி வழி ஒதுக்கப்பட்டதாகப் பிரச்னை எழுந்தது. இப்படிப் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் மாணவர்களின் தற்கொலைகளும் ஒரு புறம் அரங்கேறி வருகின்றன. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கேரளாவைச் சேர்ந்த மாணவன் ஷஹல் கொர்மத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கடந்த 1-ம் தேதி வடமாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ரஞ்சனா குமாரி என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.  

இதையடுத்து, நேற்று இரவு உ.பி மாநிலத்தைச் சேர்ந்த கோபால் பாபு என்ற எம்.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிரம்மபுத்திரா என்ற விடுதியில் தங்கியுள்ளார் கோபால் பாபு. நேற்று காலை வழக்கம்போல் தன் வகுப்புகளை முடித்துக்கொண்டு விடுதிக்குத் திரும்பிய அவர், இரவு தன் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். பிறகு அனைவரும் உறங்குவதற்காகத் தங்கள் அறைக்குச் சென்றுவிட்டனர். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கோபால் பாபுவின் அறை திறக்கப்படாமல் இருந்துள்ளது. இந்தத் தகவலை சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தினரிடம் தெரிவிக்க அவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்கு இருந்த மின் விசிறியில் கோபால் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். பிறகு, அவரது உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு உ.பி மாநிலம் கோபாலில் உள்ள பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள கோட்டூர்புரம் போலீஸார் இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.