`மஞ்சுவிரட்டு எங்கள் பாரம்பர்யம்; தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும்’ - ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம் | tamilnadu government should release order to jallikattu in thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (29/01/2019)

கடைசி தொடர்பு:21:20 (29/01/2019)

`மஞ்சுவிரட்டு எங்கள் பாரம்பர்யம்; தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும்’ - ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தை ஜல்லிக்கட்டு நடைபெறும் இடமாக அறிவித்து, ஜல்லிக்கட்டு நடத்திட அரசாணை வெளியிட வேண்டும் என ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடமாக அறிவித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் பேசுகையில், “தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்திட அரசு அனுமதி அளித்திட வலியுறுத்தி கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். தமிழகத்தில் 13 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடமாக அறிவிக்கப்படாததால் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி தர முடியாது என மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. ஆனால், அதன் பிறகு கொங்கு மண்டலமான கோவை மாவட்டம், திருப்பூர் மாவட்டம் ஆகியவை அந்தந்த மாவட்ட அமைச்சர்களின் முயற்சியால்  அரசாணை வெளியிடப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

புதிதாக அனுமதி அளிக்கப்பட்ட இந்த மாவட்டங்களில் இதற்கு முன்பு ஜல்லிக்கட்டு நடந்ததற்கான போதுமான ஆவணங்கள் இல்லை. இருப்பினும், கலாசாரத்தைக் காப்பாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுணடத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் முற்காலத்தில் இருந்தே பொங்கல் திருநாளுக்கு மறுநாள் மஞ்சுவிரட்டு எனும் கலாசார விளையாட்டை விளையாடி வருகிறோம். சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத் தேவன், ஸ்ரீவைகுண்டம் தாலுகா வல்லநாட்டைச் சேர்ந்தவர். அவர் ஜல்லிக்கட்டு காளையை அடக்கி வெள்ளையம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்த நிகழ்வு தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இணையதளத்திலேயே அரசு ஆவணமாக உள்ளது.

இதுகுறித்து ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் இந்த நிகழ்வைப் பற்றி குறிப்பிட்டும், வெள்ளையத்தேவன் காளையை அடக்குவது பொதுநிகழ்ச்சியாக நடத்தப்பட்டதற்கான சான்று இல்லை எனக் கூறியுள்ளது அவரது வீரத்துக்கும் பெருமைக்கும் களங்கம் ஏற்படுத்தப்பட்டதைப்போல உள்ளது. சுதந்திரப் போரட்ட வீரர் கட்டபொம்மனின் படைத்தளபதியாகவும் வளர்ப்பு மகனாகவும் வீரத்துடன் திகழ்ந்த வெள்ளையத் தேவன் காளையை அடக்கிய அந்த நிகழ்வு பொது நிகழ்ச்சியாகத்தான் நடத்தப்பட்டிருக்க முடியும் எனத் தோன்றுகிறது.

அதனாலேயே அந்தச் செய்தி அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தை அரசு ஏற்க மறுப்பது வருத்தம் அளிக்கிறது. பாரம்பர்ய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைத் தூத்துக்குடியில் நடத்திட அரசாணை வெளியிட்டு, அனுமதி தர வேண்டும்” என்றனர்.   

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க