‘எட்டரை அடி உயரம்; 750 கிலோ எடை’ - அறிவாலயத்துக்கு அடுத்து கருணாநிதியின் பிரமாண்ட சிலை! | karunanithi's statue after anna arivalayam...

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (29/01/2019)

கடைசி தொடர்பு:23:00 (29/01/2019)

‘எட்டரை அடி உயரம்; 750 கிலோ எடை’ - அறிவாலயத்துக்கு அடுத்து கருணாநிதியின் பிரமாண்ட சிலை!

சிலை

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உருவச் சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலைஞரின் முழு உருவச் சிலையைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் தமிழக அனைத்துக்கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். தேசிய அளவில் கருணாநிதியின் சிலை திறப்பு விழா பேசப்பட்டது.

தமிழகத்தின் பல இடங்களில் கருணாநிதியின் சிலை அமைக்க ஏற்பாடுகள் நடந்துவரும் வேளையில், அறிவாலயத்தையடுத்து கருணாநிதியின் இரண்டாவது பிரமாண்ட சிலை, அவருடைய குருகுலமான ஈரோட்டில் திறக்கப்பட இருக்கிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலையை வடிவமைத்த திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்த சிற்பி தீனதயாளன் தான், ஈரோட்டுக்கான சிலையையும் செய்து கொடுத்திருக்கிறார். எட்டரை அடி உயரம், 750 கிலோ எடையில் வெண்கலத்தில் தயாராகியிருக்கும் பிரமாண்ட சிலையை, ஈரோடு முனிசிபல் காலணியில் கட்சிக்குச் சொந்தமான இடத்தில் நாளை (30.01.2019) தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

கருணாநிதியின் சிலை 

ஈரோட்டில் கருணாநிதியின் சிலை அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடன்பிறப்புகளிடம் கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் மேல் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. ஈரோடு தெற்கு மாவட்டத் தி.மு.க செயலாளர் முத்துசாமி தலைமையில் சிலை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தாலும், கருணாநிதியின் சிலையைச் செய்ய அறிவாலயத்தில் இருந்து ஸ்டாலின்தான் ஆர்டர் கொடுத்திருக்கிறார். அறிவாலயத்துக்கு அடுத்தபடியாக கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை ஈரோட்டில்தான் அமைக்கப்பட இருக்கிறது. அதனையடுத்து அண்ணா பிறந்த காஞ்சியில் பிப்ரவரி 14-ம் தேதி திறக்கப்பட இருக்கிறது.

ஈரோட்டில் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவையொட்டி உடன் பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ‘தலைவர் கருணாநிதியின் சிலை என்பது நமது வணக்கத்திற்கானது மட்டுமல்ல; கொள்கையின் வடிவமைப்பு. இலட்சியத்தை முன்னெடுத்துப் பயணிப்பதற்கான ஊக்கச் சக்தி. எதிர்ப்பு கண்டு கலங்காமல் எதிர்நீச்சல் போட வேண்டும் என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கும் உயிரோவியம். அவற்றை நினைவூட்டத் தான் அறிவாலயத்தின் முகப்பில் கருணாநிதியின் சிலையைத் திறந்தோம். இப்போது அவரது குருகுலமான ஈரோட்டில் திறக்கிறோம். சிலையாக இருக்கும் தலைவர் கருணாநிதி அவர்கள் எப்போதும் நமக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்காக உயர்ந்து நிற்கிறார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.