`சாமியாராக்கப் பார்க்கிறார்கள்’ - திருமணம் செய்து வைக்காததால் வேலூரில் தீக்குளிக்க முயன்ற நபர்! | person arrested who are tried to suicide attempt at Vellore

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (30/01/2019)

கடைசி தொடர்பு:02:00 (30/01/2019)

`சாமியாராக்கப் பார்க்கிறார்கள்’ - திருமணம் செய்து வைக்காததால் வேலூரில் தீக்குளிக்க முயன்ற நபர்!

‘‘தன்னைப் பைத்தியக்காரன் என்று கூறி திருமணம் செய்து வைக்காமல், சாமியாராக்க தன்னுடைய அண்ணன் முயற்சி செய்கிறார்’’ என்றுகூறி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், நபர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீக்குளிக்க முயன்ற ஜானகிராமன்

வேலூர் மாவட்டம், அன்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவர், 29-ம் தேதி, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சென்ற அவர், மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து திடீரென தன்மீது ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், விரைந்து சென்று ஜானகிராமனை பிடித்து, அவரின் மேல் தண்ணீரை ஊற்றினர். போலீஸாரிடம், தற்கொலை முயற்சி குறித்து ஜானகிராமன் கூறுகையில், ‘‘எனது அண்ணன் லிங்கேஷ், பைனான்சியராக உள்ளார். அவர், என்னைப் பைத்தியக்காரன் என்று ஊர் முழுக்க சொல்லி வருகிறார்.

25 வயதில் திருமணம் செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். இப்போது, 38 வயதாகிறது. திருமணம் செய்து வைக்கவில்லை. சொத்தை முழுவதுமாக அபகரிக்கத் திட்டமிட்டு, எனது அண்ணன், திருமணம் செய்து வைக்காமல் என்னைச் சாமியாராக்க முயற்சி செய்கிறார். நானே, பெண் பார்த்து திருமணம் செய்து கொள்கிறேன் என்றாலும், தடுக்கிறார். கத்தியால் கொலை செய்ய பார்க்கிறார். அண்ணனிடமிருந்து தப்பித்து, விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தேன். போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன்’’ என்றார். போலீஸார், ஜானகிராமனை, சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.