பழனி சென்று திரும்பிய புதுக்கோட்டை பக்தர்களுக்கு வாந்தி மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி! | Devotees got sick near pudukkottai

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (30/01/2019)

கடைசி தொடர்பு:06:30 (30/01/2019)

பழனி சென்று திரும்பிய புதுக்கோட்டை பக்தர்களுக்கு வாந்தி மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி!

பழனிக்குப் பாதயாத்திரை சென்றுவிட்டு வீடு திரும்பிய அன்னவாசலைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வரும் வழியில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. மதியநல்லூர்,அன்னவாசல் மருத்துவமனைகள் மற்றும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 பக்தர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ஆரியூரைச் சேர்ந்த முருகர் பக்தர்கள் 50க்கும் மேற்பட்டோர் குழுவாக கடந்த 26ம் தேதி பழனிக்கு பாதயாத்திரை சென்றனர். பாதயாத்திரை சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பினர்.பாதயாத்திரை குழுவாக செல்லும் பெரும்பாலான பக்தர்கள் ஆங்காங்கே சமைத்து சாப்பிடுவது வழக்கம். இதேபோல், ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறும். இந்த நிலையில், சேர்ந்து சமைத்த உணவைச் சாப்பிட்டு விட்டு சொந்த ஊரான ஆரியூருக்கு கிளம்பி வந்தனர். வரும் வழியில் பலருக்கும் உணவு செரிக்காமல் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உள்ளது. உடனே அவர்களை அருகே இருந்த மதியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதி

மதியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தொடர்ந்து அருண்குமார் (21) சுப்பிரமணி (45) பாலமுருகன் (35) பழனியப்ன் (29) வீரமணி (25) தேவி (40) ரம்யா (24) லெட்சுமி (21) உள்ளிட்டோர் அன்னவாசல் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், தனியார் மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சாப்பிட்ட உணவில் ஏதோ நச்சுத்தன்மை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அன்னவாசல் காவல்துறை விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.