”ஸ்கூலுக்கு பூட்டு போட்டது யாரு?” - தேனி அருகே சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்கள் | School students road roko near theni

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (30/01/2019)

கடைசி தொடர்பு:08:00 (30/01/2019)

”ஸ்கூலுக்கு பூட்டு போட்டது யாரு?” - தேனி அருகே சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்கள்

ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரத்தில் பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததைக் கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாலை மறியல் போராட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது டி.சுப்புலாபுரம் கிராமம். இங்கே செயல்பட்டுவரும் அரசு ஆரம்பப்பள்லியில் சுமார் 200ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகிறர்கள். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நடத்தும் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் காரணமாக இப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் கடந்த சில நாள்களாகப் பள்ளிக்கு வருவதில்லை. ஆனால், தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லா வகுப்பறையில் அமர்ந்துவிட்டுச் செல்கின்றன. அதே போல நேற்று (29/01/2019) பள்ளிக்கு வந்த மாணவர்கள் பூட்டு போடப்பட்டு மூடப்பட்டிருந்த பள்ளியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் கோபமடைந்த அவர்கள் டி.சுப்புலாபுரம் - ஆண்டிபட்டி பிரதான சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது. “ஸ்கூலுக்கு பூட்டு போட்டது யாரு?” “பள்ளியை உடனே திற” போன்ற கோஷங்களை எழுப்பினர். அவர்களைக் கண்ட ஊர் பொதுமக்கள் அச்சலைமறியலில் கலந்துகொள்ளவே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்கள் மற்றும் ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பள்ளி திறக்கப்பட்டது. இருந்த போதும் வகுப்பறைகள் திறக்கப்படாததால் பள்ளி வளாகத்திலேயே அமர்ந்துகொண்டனர். அங்கன்வாடிப்பணியாளர்களும் இல்லாத சூழலில் மதியம் பசியோடு அனைவரும் வீட்டிற்குச் சென்றனர்.