திருச்சி அருகே திறக்கப்படாத நடிகர் சிவாஜி சிலை - கையெழுத்து இயக்கம் நடத்திய ரசிகர்கள்! | Fans demanding to open Trichy Bronze statue of actor Shivaji

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (30/01/2019)

கடைசி தொடர்பு:11:18 (30/01/2019)

திருச்சி அருகே திறக்கப்படாத நடிகர் சிவாஜி சிலை - கையெழுத்து இயக்கம் நடத்திய ரசிகர்கள்!

ஒன்பது வருடங்களாக திருச்சியில் மூடியே இருக்கும் நடிகர் சிவாஜி சிலையைத் திறக்கக் கோரி, அவரது ரசிகர்கள் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளனர்.

சிவாஜி ரசிகர்கள்

சிவாஜி ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2009 தி.மு.க ஆட்சியில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வெண்கலச் சிலை அமைக்க, திருச்சி பாலக்கரை மெயின் ரோட்டில் இடம் ஒதுக்கப்பட்டது. நகரின் பிரதான சாலையில் தங்கள் தலைவருக்கு சிலை வைக்க இடம் கிடைத்த மகிழ்ச்சியில் சிவாஜி ரசிகர்கள் முயற்சி செய்து, பிரமாண்டமான வெண்கலச் சிலை அமைத்து, அதைச் சுற்றி பூங்காவும் அமைக்கப்பட்டது. ஆனால், பணிகள் முடிவடையும்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அதையடுத்தே சிவாஜி ரசிகர்களுக்கு வேதனை கூடியது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சிலை திறப்பு விழா தள்ளிப்போனது. அதனால், சிலை துணியால் மூடப்பட்டது. சிலையைத் திறந்துவைக் கோரி, அவரது ரசிகர்கள் வலியுறுத்தினர். ஆனால், அதை அரசு கண்டு கொள்ளவில்லை. இதனால்  பொங்கிய ரசிகர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென இரவில் திரண்டு, மூடி இருந்த துணியைக் கிழித்தெறிந்ததுடன், வெண்கலச் சிலையைக் கழுவி, திறந்துவைத்துக் கோஷமிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், மீண்டும் சிலையைத் துணியால் சுற்றி, மூடிவைத்தனர்.

திருச்சி சிவாஜி சிலை

இந்நிலையில், திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர்கள் நற்பணி சங்கம் சார்பில்,  திருச்சியில் தயார் நிலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை அரசு முறையாகத் திறந்துவைக்கக் கோரி,  திருச்சி மாநகர் முழுக்க கையெழுத்து இயக்கம் தொடங்கினர். நம்மிடம் பேசிய சிவாஜி ரசிகர்  அன்பழகன், "தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நடிப்பின்மூலம் பெருமைசேர்த்தவர், நடிகர் திலகம். அவருக்குப் பல விருதுகள் தேடிவந்தன. அதுமட்டுமல்லாமல், நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக அறிவித்துள்ளதுடன், மேலும் அடையாறு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

சிவாஜி ரசிகர்கள்

ஆனால், திருச்சியில்  ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அமைக்கப்பட்ட வெண்கலச் சிலை மட்டும், ஆட்சியாளர்கள் திறந்து வைக்காமல் இழுத்தடிக்கிறார்கள். இந்தச் சிலையைக் கடந்த 9 வருடங்களாக துணியால் சுற்றிவைத்து, மிகப்பெரிய துரோகத்தைச் செய்து வருகிறார்கள். இதைவிட மிகப் பெரிய அவமானம் எதுவும் இல்லை. சிவாஜி கணேசனின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில்,  திருச்சியில் வைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிலையைத் திறந்துவைக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்துப் பிரசாரம் தொடங்கியுள்ளோம். மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் இந்தப் படிவங்களை அப்படியே அரசுக்கு அனுப்பி வைத்து, மக்களின் உணர்வை எடுத்துச் சொல்வோம். அதன் பிறகும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சிவாஜி ரசிகர்கள் கலந்துபேசி அறிவிப்போம்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க