மாணவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த அண்ணா பல்கலைக்கழகம் -செமஸ்டர் முறையில் மாற்றம்!  | Anna University relax arrears rules students happy follow old system

வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (30/01/2019)

கடைசி தொடர்பு:10:19 (30/01/2019)

மாணவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த அண்ணா பல்கலைக்கழகம் -செமஸ்டர் முறையில் மாற்றம்! 

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்த செமஸ்டர் முறைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில், `தற்போது பொறியியல் கல்லூரியில் படித்துவரும் மாணவர்களுக்கு, பழைய செமஸ்டர் முறையே கடைப்பிடிக்கப்படும்' என்று அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். 

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், முதல் செமஸ்டரில் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அதனை உடனடியாக இரண்டாவது செமஸ்டர் தேர்வுடன் முதல் செமஸ்டரில் தேர்ச்சி பெறாத பாடத்தின் தேர்வை எழுத முடியாது. மூன்றாவது செமஸ்டரில் படிக்கும்போது மட்டுமே முதல் செமஸ்டரில் அரியர் வைத்திருந்த பாடத்தின் தேர்வை  எழுத முடியும் என்று விதிமுறையை மாற்றியிருந்தது. 

இதனால் நான்காவது ஆண்டில் அரியர் இருந்தால், அதனை ஐந்தாம் ஆண்டில்தான்  எழுதித் தேர்ச்சிபெற முடியும். இதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகத்தில், தனியார் சுயநிதி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் குமார், ''பத்து நாள்களுக்குள் மாணவர்களின் கோரிக்கையைப் பரிசீலனைசெய்து நல்ல முடிவை அறிவிப்போம்" என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று கூடிய அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி மன்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாணவர்கள் முதல் செமஸ்டரில் அரியர் வைத்திருந்தால், அதனை அடுத்த செமஸ்டரிலேயே எழுத அனுமதி வழங்கலாம் என முடிவெடுத்து, அதை ஆட்சி மன்றக் குழுவுக்குப் பரிந்துரை வழங்கியுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, "மாணவர்கள் தங்களுடைய அரியர் தேர்வுகளை விரைவில் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, அரியர் இல்லா பொறியியல் படிப்புக்கு மாறிவிட வேண்டும்" என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.