ரோந்து காவலர்களுக்கு தரப்படும் பயணப்படி எவ்வளவு? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி! | give travel allowance to police personnel for patrol orders high court

வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (30/01/2019)

கடைசி தொடர்பு:10:47 (30/01/2019)

ரோந்து காவலர்களுக்கு தரப்படும் பயணப்படி எவ்வளவு? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

ரோந்து செல்லும் காவலர்களுக்கு உரிய பயணப்படியை இன்னும் இரு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ரோந்து காவலர்களுக்கு தரப்படும் பயணப்படி எவ்வளவு? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

ரோந்து செல்லும் காவலர்களுக்கு உரிய பயணப்படியை இன்னும் இரு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ரோந்து

தமிழகத்தில் மொத்தம் 1,343 காவல்நிலையங்கள் உள்ளன. காவல்துறை இயக்குநர் முதல், இரண்டாம் நிலை காவலர்கள் வரை மொத்தம் 1,24,236 பேர் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு காவல்நிலையத்திலும் விசாரணைக்காக வெளியே செல்லும் போது, காவலர்களுக்குத் தேவைப்படும் வாகனங்களோ, எரிபொருளோ வழங்கப்படுவதில்லை. அனுமதிக்கப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ரோந்து பணிக்கே சரியாகிவிடுகிறது. வழக்கு விசாரணைக்குச் சொந்த வாகனத்தைப் பயன்படுத்துவதால், தங்கள் கைக்காசை போட வேண்டியதிருக்கிறது என்கிற குமுறல் நீண்ட காலமாக காக்கிகள் மத்தியில் ஒலித்து வருகிறது. 

இவ்விவகாரத்தை சுயமாக கையில் எடுத்த உயர்நீதிமன்றம், கடந்த ஜனவரி 24-ம் தேதி சிறப்பு வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், போலீஸாருக்குத் தேவைப்படும் பயணப்படியை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர். 

தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது, ``ஒரு குற்றம் நிகழும் போது காவல்துறையை விமர்சிப்பதை வழக்கமாக்கி வைத்திருக்கிறோம். குற்றம் நிகழ்வதை தடுக்கவும், ரோந்துப் பணிக்கும், உளவுத் தகவலைச் சேகரிப்பதற்கும் காவலர்களுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறோமா? என்பதை பற்றி நாம் யோசிப்பதில்லை.

ரோந்துக்குச் செல்லும் போலீஸாருக்குத் தேவைப்படும் எரிபொருள், பயணப்படி உரிய அளவில் வழங்கப்படுவதில்லை. கிராமப்புறங்களிலுள்ள காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் பெரிய நிலப்பரப்பைக் கண்காணிக்க வேண்டியதிருக்கிறது. பண நெருக்கடியால் ரோந்துப் பணியை மேற்கொள்வதில் போலீஸாரிடையே சுணக்கம் ஏற்பட்டுள்ளது. 

காவல்நிலையங்களுக்கு ஏற்றவாறு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகச் சட்டம் ஒழுங்கு உதவி காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். பெரிய காவல்நிலையங்களுக்கு 5 இருசக்கர வாகனங்களும், நடுத்தர மற்றும் சிறிய காவல்நிலையங்களுக்கு மூன்று இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதன்படி, 31 மாவட்டங்கள், 7 மாநகரங்களில் உள்ள காவல்நிலையங்களுக்கு 7,265 இருசக்கர வாகனங்கள், 6,187 நான்கு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது. தலா ஓர் உதவி காவல் ஆய்வாளர் தலைமையில், 625 ரோந்துக் காவல் படைகள் செயல்படுகின்றன என்று கூறியுள்ளனர். எல்லாம் சரி, காவலர்களுக்கு எவ்வளவு பயணப்படி வழங்கப்படுகிறது? என்ற கேள்விக்கு மட்டும் விடையளிக்கவில்லை. 

ரோந்து

உதவி காவல்துறைத் தலைவர் அளித்துள்ள அறிக்கையில், மதுரையிலுள்ள 21 காவல்நிலையங்கள், 4 மகளிர் காவல்நிலையங்களில் தோராயமாக 1750 பேர் வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு 138 இருசக்கர வாகனங்கள், 174 நான்கு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது எப்படிப் போதுமானதாக இருக்கும்? நிறைய காவலர்கள் தங்கள் சொந்த வாகனங்களில்தாம் காவல் பணியை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு தேவைப்படும் பயணப்படியை அரசு வழங்குவதில்லை.

அரசு வாகனங்களைப் பயன்படுத்துவோருக்கு எரிபொருள் அளவு கட்டுப்பாடு உள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு 35 லிட்டர், நான்கு சக்கர வாகனங்களுக்கு 110 லிட்டர் மட்டுமே பயன்படுத்த இயலும். குற்ற வழக்குகளை விசாரிக்கப் போகும் இடத்தில், இதற்கு மேல் எரிபொருள் தேவைப்பட்டால் தங்கள் கைக்காசைப் போட்டுத்தான் நிரப்ப வேண்டும். கிராமப்புறங்களில் வேலை பார்க்கும் போலீஸாரின் நிலைமை மிகவும் மோசம். தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மிகப்பெரும் பகுதிகளுக்குச் சொந்தப் பணத்தைப் போட்டுத்தான் காவல் பணிக்குச் செல்கின்றனர்.

ஆகவே, மாதம் 1500 முதல் 2500 ரூபாய் வரையில் காவலர்களுக்கு தமிழக அரசு பயணப்படி வழங்க வேண்டும். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இதற்கான பணியை முடிக்குமாறும் அரசுக்கு உத்தரவிடுகிறோம்." என்றனர்.

ரோந்து

சட்டம் ஒழுங்குப் பிரிவை விட, குற்றப்பிரிவு காவலர்களின் நிலைமைதான் மிகவும் மோசம். காவல்நிலையங்களுக்கு என்று ஒதுக்கப்படும் இரண்டு கார்களையும் சட்டம் ஒழுங்குப் பிரிவினர் எடுத்துக்கொள்வார்கள். திருட்டு, வங்கி மோசடி, கொள்ளை போன்ற வழக்குகளை விசாரிக்கும் குற்றப்பிரிவு போலீஸார், வெளியூருக்கு விசாரணைக்காகச் செல்லும் போது வாடகைக்கு தனியார் வாகனங்களை எடுத்துச் செல்லும் நிலைதான் உள்ளது. இதற்கு தேவைப்படும் பயணப்படி வழங்கப்படுவதில்லை. 

மேலதிகாரியை கவனிப்பதில் தொடங்கி, வழக்குகளுக்குச் செலவழிப்பது வரையில் எல்லாவற்றுக்குமே தங்கள் கைக்காசை போட வேண்டியதிருப்பதாகவும், இதுவே லஞ்சத்துக்கு அடிப்படையாக அமைந்துவிடுவதாகவும் காவலர்கள் கொதிக்கிறார்கள். ``லஞ்சம் வாங்கியே ஆக வேண்டுமென்ற எண்ணத்தில் பெரும்பான்மையான காவலர்கள் இல்லை. அவர்களின் பொருளாதார நெருக்கடிதான் இக்கட்டான சூழலுக்குள் தள்ளுகிறது. தேவையான வசதியை ஏற்படுத்திக்கொடுத்தால், ஏன் கைநீட்ட போகிறார்கள்?" என்கிறார் சென்னை மாநகரின் துணை ஆணையர் ஒருவர். காவல் பணிக்கு உரிய வசதிகளை செய்து கொடுத்தால், நேர்மையாகச் செயல்பட விரும்புபவர்கள் எந்தப் பொருளாதாரச் சிக்கலும் இல்லாமல் செயல்பட முடியும். நீதிமன்றம் அதற்கான முதல் முயற்சியை எடுத்துள்ளது. தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

 


டிரெண்டிங் @ விகடன்