2 ரூபாய் கடனுக்காக கல்லால் அடித்துக் கொலை! - புதுவையில் நடந்த கொடூரம் | Man murdered and one person arrested

வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (30/01/2019)

கடைசி தொடர்பு:11:11 (30/01/2019)

2 ரூபாய் கடனுக்காக கல்லால் அடித்துக் கொலை! - புதுவையில் நடந்த கொடூரம்

இரண்டு ரூபாய் கடனுக்காக நடந்த வாய்த் தகராறு கொலையில் முடிந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மணி

புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதியான நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர், மீனவர் முத்தாள்ராயன். 46 வயதான இவர், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் தரணி என்பவருடன் தவளக்குப்பம் - அபிஷேகப்பாக்கம் சாலையில் இருக்கும் மதுக்கடையில் மது அருந்திவிட்டு, அருகில் இருந்த பெட்டிக்கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது, இவர்களுக்கும் அங்கு நின்றிருந்த வாலிபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி, இரு தரப்பினரும் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர்.

ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த அந்த வாலிபர், அருகிலிருந்த செங்கல்லை எடுத்து முத்தாள்ராயனைச் சரமாரியாகத் தாக்கிவிட்டு ஓடி விட்டார். அதில் பலத்த காயமடைந்த முத்தாள்ராயன், ரத்த வெள்ளத்தில் மயங்கிவிழுந்தார். தகவலறிந்த தவளக்குப்பம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்தாள்ராயனை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தவளக்குப்பம் காவல் துறையினர் கொலை வழக்குப் பதிவுசெய்து குற்றவாளியான வாலிபரைத் தேடிவந்தனர். முத்தாள்ராயனைக் கல்லால் அடித்துக் கொன்றது அபிஷேகப்பாக்கத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் மணி என்பது தெரிய வர, அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.

விசாரணை

கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர், "அந்த மதுக்கடைக்கு அருகே பெட்டிக்கடை நடத்திவருபவர் எனது உறவினர். அந்தக் கடையில் முத்தாள்ராயன் சைட் டிஷ் வாங்கித் தின்றுவிட்டு, 2 ரூபாய் பாக்கி வைத்திருந்தார். அன்றைய தினம் அந்தப் பணத்தைக் கேட்ட என் உறவினரிடம் முத்தாள்ராயனும், தரணியும் தகராறு செய்தனர். அதனைத் தட்டிக்கேட்ட என்னை அவர்கள் இருவரும் தாக்கினர். பயந்து ஓடி ஒளிந்த என்னை விடாமல் கல்லால் தாக்கினர். அதனால் ஆத்திரமடைந்த நான், முத்தாள்ராயனை அங்கிருந்த செங்கல்லால் தாக்கினேன். அதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கிவிழுந்ததும், நான் அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓடிவிட்டேன். கோபத்தில்தான் தாக்கினேனே தவிர, கொலைசெய்யும் எண்ணத்தில் இல்லை" என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க