`விஐபி-க்களுக்கு நோ ; அருள்மொழிக்கு எஸ் !' - மதுரையில் மோடி சந்தித்ததன் காரணம்? | Arulmozhi who gave pride to Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (30/01/2019)

கடைசி தொடர்பு:11:30 (30/01/2019)

`விஐபி-க்களுக்கு நோ ; அருள்மொழிக்கு எஸ் !' - மதுரையில் மோடி சந்தித்ததன் காரணம்?

மதுரைக்கு, பெண் ஆளுமைகள் பலர் பெருமை தேடித் தந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் அருள்மொழியும் இணைந்துள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடி மதுரை வந்தபோது, சந்திக்க விரும்பிய நபர்களில் இவரும் ஒருவர் என்பதுதான் பெருமைக்குக் காரணம்.

மதுரையில் வசிக்கும் தொழில் முனைவரான அருள்மொழி, வங்கியில் சிறுதொழில் கடன் பெற்று ஸ்டேஷனரி பொருள்கள் உட்பட பல பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்துவருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு, அவருக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து ஆர்டர் கொடுத்து, சில பொருள்கள் வாங்கியுள்ளனர்.  அதனால் மகிழ்ச்சியான அருள்மொழி, தான் முத்ரா திட்டத்தில் கடன் பெற்று சிறப்பாகத் தொழில்செய்து வருவதையும், தனக்கு  பிரதமர்  அலுவலகத்திலிருந்து ஆர்டர் கிடைத்ததையும் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டு பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

பிரதமர் மோடியுடன் அருள்மொழி


இதை அப்போது, `மான் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி  அருள்மொழியைக் குறிப்பிட்டுப் பேச, மதுரை மக்கள் மத்தியில் பிரபலமானார். அதற்குப்பின்,  ஆன்லைன் மார்க்கெட்டிங் செய்துவந்தவரை மத்திய அரசு அதிகாரிகள் தொடர்புகொண்டு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட மதுரை வரும் பிரதமர், தங்களை சந்திக்க விரும்புகிறார், தயாராக இருங்கள் என்று தெரிவிக்க, அருள்மொழியால் அதை நம்ப முடியவில்லை.

கடந்த 27-ம் தேதி, பி.ஜே.பி பொதுக்கூட்டம் முடிந்ததும் அருள் மொழியை சந்தித்த பிரதமர், ''மதுரையில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆன்லைன் வியாபாரம் எப்படிப் போகிறது... தொழிலில் வேறு ஏதும் பிரச்னைகள் உள்ளதா, குடும்பத்தினர் நலமா, தொழிலில் இன்னும் வளர வேண்டும்'' என்று வாழ்த்திவிட்டுக் கிளம்பினார். இதேபோல குழுவாகத் தொழில்செய்யும் சிலரையும் சந்தித்து அவர்களையும் உற்சாகபடுத்திப் பேசிவிட்டுச் சென்றார்.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள்கூட பிரதமரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பெண் தொழில் முனைவர்  ஒருவரை சந்தித்து பேசி வாழ்த்தியது, அனைவராலும் பேசப்பட்டுவருகிறது. 

அருள்மொழியின் கணவர் சரவணன், ஒரு பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க