`மதுரைக்காரர்கள் உயிரையும் கொடுப்பார்கள்; உயிரையும் எடுப்பார்கள்!' -செல்லூர் ராஜூ சர்ச்சைப் பேச்சு | sellur raju cotroversy speech

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (30/01/2019)

கடைசி தொடர்பு:12:10 (30/01/2019)

`மதுரைக்காரர்கள் உயிரையும் கொடுப்பார்கள்; உயிரையும் எடுப்பார்கள்!' -செல்லூர் ராஜூ சர்ச்சைப் பேச்சு

``மதுரைக்காரர்கள் நட்புக்காக உயிரையும் கொடுப்பார்கள். துரோகம் செய்தால் உயிரையும் எடுப்பார்கள்'' என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செல்லூர் ராஜூ

ஊடகங்களில் வராத இப்பேச்சு, இப்போதுதான் பரவிவருகிறது. அதிரடியாகப் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது ஒன்றும் செல்லூர் ராஜூக்கு புதிதல்ல. சமீபகாலமாக அப்படி அதிரடியாகப் பேசுவதைக் குறைத்திருந்தார். தற்போது, மீண்டும் களமாடத் தொடங்கிவிட்டார்.

மதுரையில், சில நாள்களுக்கு முன்  நடந்த 'மிஸ்டர் தமிழ்நாடு' ஆணழகன் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கியவர், வாழ்த்தி பேசும்போது ''இந்த ஆட்சி விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம்கொடுத்து வருகிறது. விளையாட்டு விடுதிகளில், உணவுப்படி அதிகப்படுத்தி வழங்கப்படுகிறது. அதனால், விளையாட்டுகளில் இளைஞர்கள் சிறந்து விளங்குகிறார்கள். அந்த வகையில், உடல் அழகை, உடல் திறனைக் காட்டும் இந்தப் போட்டியைப் பார்க்க மகிழ்ச்சி அளிக்கிறது. நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்தவர்களுக்கு வாழ்த்துக்கள். 

இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிப் பேசியவர், ஒவ்வொரு முறையும் கைதட்டுங்கள் என்றார். ஆம், எங்க மதுரைக்காரர்களிடம் கைதட்டலை கேட்டுத்தான் வாங்க வேண்டும். எல்லாத் திறமையும் மதுரைக்காரர்களிடம் உண்டு. அந்த அளவுக்கு வித்தியாசமானவர்கள். மதுரைக்காரர்கள் நட்புக்காக உயிரையும் கொடுப்பார்கள், அதே நேரம் துரோகம் செய்தால் உயிரையும் எடுப்பார்கள்'' என்றார்.   

சட்டத்தைப் பாதுகாக்கவும், அமைதியைப் போதிக்கவேண்டிய மாநில அமைச்சரே பொது நிகழ்ச்சியில்  வன்முறையை ஆதரிப்பதுபோல பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க